சென்னை வேளச்சேரி திரெளபதி அம்மன் கோவில் 5வது குறுக்கு தெருவில் 325 சதுர அடியில் சிமெண்ட் சீட் அமைத்த ஒரு வீடும், 350 சதுர அடியில் உள்ள ஒரு வீட்டையும், ஆக்கிரமிப்பில் இருப்பதாக அதே பகுதியை சேர்ந்த சசிகலா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நீதிமன்றத்தில் ஆக்கிரமிப்பை அகற்றிடுமாறு தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இன்று காலை வேளச்சேரி காவல் ஆய்வாளர் ஜெயராம் தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆக்கிரமிப்பு வீட்டை இடிக்க ஜேசிபி இயந்திரங்களுடன் வந்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆக்கிரமிப்பு வீட்டுக்காரர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் தரப்பில் 10 நாள் கால அவகாசம் வழங்கப்பட்டது.
பின்னர அந்த இடத்திற்கு வந்த வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அசன் மவுலானா தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய செயற்பொறியாளர் நித்யானந்தத்திடம் நீ என்ன கோர்ட் அமீனா மாதிரி வீட்டை இடிக்க வந்துடுவியா என மிரட்டினார்.

அதனை தொடர்ந்து வேளச்சேரி காவல் ஆய்வாளர் ஜெயராமை நோக்கி வந்து ஆய்வாளரிடம் வந்து தயவு செய்து வந்து நிக்காதீங்க, எங்க கிட்ட சொல்லாமல் எப்படி நீங்க வந்து நிக்கலாம் என மிரட்டும் தொணியில் பேசினார் இதனை கேட்டு ஆய்வாளரும் அமைதியாக நின்று கொண்டிருந்தார்.
ஒரு காவல்துறை அதிகாரி சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க எங்கு வேண்டுமானாலும் சென்று என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்கலாம், ஆனால் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அசன் மவுலானா அவரை கேட்காமல் எங்கும் போககூடாது என கூறுவது ஆணவத்தின் உச்சம், அதிகாரத்தின் அடாவடி தனம், ஒரு மக்கள் பிரதிநிதி நீதிமன்ற உத்தரவை நடைமுறை படுத்த வந்த அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரை மிரட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இறுதியாக தமிழ்நாடு நகர்புற மேம்பாட்டு வாரிய அதிகாரிகளும், காவல்துறையினரும் தேர்தல் நேரம் என்பதால் எம்.எல்.ஏ இப்படி பேசுகிறாரோ என முனுமுனுத்துக் கொண்டே சென்றனர்.