உசிலம்பட்டி அருகே தோட்டத்தில் அமைக்கப்பட்ட மின்வேளியில் சிக்கி கொத்தனார் பலியாகியுள்ளார். உடலை மறைக்க 2 கிலோ மீட்டர் தொலைவில் மலை அடிவாரத்தில் உடலை வீசி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேர்வைபட்டியைச் சேர்ந்தவர் மாயன். கொத்தனார் வேலை செய்து வரும் இவர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வேலை இல்லாததால், இன்று அதிகாலை கிராமத்தின் அருகே உள்ள தோட்டத்து பகுதியில் மழை காலத்தில் முளைக்கும் காளான்களை சேகரிக்க சென்றுள்ளார்.

காளான் சேகரிக்க சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பாத சூழலில், உறவினர்கள் அருகே உள்ள தோட்டத்து பகுதியில் தேடி உள்ளனர்.
மலை அடிவார பகுதியான வேப்பங்குளம் ஓடை அருகே மாயனின் உடல் காயங்களுடன் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், காளான் சேகரிக்க சென்ற தோட்டத்து பகுதியில் அமைக்கப்பட்ட மின்வேளியில் சிக்கி மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார் என்றும், இறந்த உடலை மறைக்க சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வேப்பங்குளம் ஓடை அருகே வீசி விட்டு சென்றது தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், மாயனின் உடல் கிடந்த இடத்தின் அருகே உள்ள தோட்டத்து பகுதிகளில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இதே பாணியில் மின்வேளியில் சிக்கி உயிரிழந்த நபர்களின் உடல்களை மறைக்க வெவ்வேறு இடங்கள் மற்றும் கிண்றில் வீசி சென்ற சம்பவம் என 4 சம்பவங்கள் அரங்கேறியுள்ளது, இது போன்ற சம்பவங்களில் இன்று வரை 5 பேர் பலியாகி உள்ள சூழலில், தோட்டத்து பகுதியில் சட்டவிரோதமாக மின்வேளி அமைக்கும் நபர்கள் மீதும், இது போன்று உடலை மறைக்கும் செயல்களில் ஈடுபடுவோர் மீதும் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.