
மனிதர்களுக்கும் உயிரினங்களுக்கும் இடையிலான ஆழமான நட்பு பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இங்கே ஒரு பெண்ணிற்கும் பறவைக்கும் உள்ள ஆழமான நட்பு நம்மை மெய் சிலர்க்க வைக்கிறது. கிட்ட தட்ட மூன்று மாதங்களுக்கு ஒரு பறவையை தன் கூந்தலில் கூடு கட்ட அனுமதித்துள்ளார் அந்த விசித்திர பெண். இப்படி ஒரு அசாதாரண நட்பின் கதை இணையத்தில் எக்கச்சக்கமாக பகிரப்பட்டுள்ளது.

Hannah Bourne-Taylor என்ற பெண் ஒரு எழுத்தாளர். இயற்கையுடனும், பறவையுடனும், உயிரினங்களோடும் ஒன்றிப்போகும் ஒருவர். இவர் தனது ட்விட்டர் பதிவில், பறவை கூட்டத்தில் இருந்து தனியாக விடப்பட்ட ஒரு சிறிய பறவைக்கு, 84 நாட்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. லண்டனில் வசிக்கும் ஹன்னா, தனது புதிய வாழ்க்கையைத் தொடங்க கானாவுக்கு இடம்பெயர்ந்தார். 2018ல் மழைக்காலத்தின் குறிப்பிட்ட நாளில், ஒரு சிறிய பறவை அதன் கூட்டத்தில் இருந்து பிரிந்து தவித்தது . பலத்த காற்றினால் மாமரத்தில் இருந்து விழுந்த கூட்டில் அந்த சின்னஞ்சிறு பறவை இருப்பதை பார்த்திருக்கிறார் ஹன்னா. அதன் கண்கள் இறுக்கமாக மூடியிருந்த நிலையில், மழையில் நடுங்கிக் கொண்டிருந்தது. முதலில் ஒரு அட்டைப் பெட்டியில் வைத்த அவர் இரவு முழுவதும் விழித்திருந்து, அதனை பாதுகாப்பாக வைப்பது எப்படி என்றி யோசித்துள்ளார்.




பின் ஹன்னா அந்த பறவையை அன்பாகவும் அக்கறையுடனும் பராமரிக்கத் தொடங்கினார். அந்த குட்டி பறவை பாதுகாப்பாக உணர வேண்டும் என்று தன் கூந்தலை கூடு போல் வடிவமைத்து அதற்கு வித்தியாசமான இருப்பிடம் கொடுத்து பராமரித்துள்ளார். பின்னர் நன்றாக வலர்ந்து வலிமை பெற்றதும் அப்பறவை ஹன்னாவை விட்டு பறந்து சென்றது. இன்றும், அந்த பறவையை பற்றிய நினைவு வரும் போது அழுகிறேன் என்று ஹன்னா தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் ஹன்னா தனது புதிய புத்தகமான ‘Fledgling’ –ல் இது பற்றி எழுதியுள்ளார்.

மனிதருக்கும் உயிரினத்துக்கும் உள்ள தொடர்பு எண்ணில் அடங்கா ஒன்று என்பதை இந்நிகழ்வு மேலும் உறுதிப்படுத்தியிருக்கிறது.
