மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் மாதாந்திர நகர் மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நகர் மன்ற தலைவர் தேன்மொழி, நகராட்சி ஆணையாளர் இளவரசு தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஊராட்சி ஒன்றியத்திடமிருந்து பெறப்பட்ட சந்தை கடைகளுக்கு வாடகை வசூல் செய்ய தீர்மானம் கொண்டு வரப்பட்டிருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஏற்கனவே 6 கோடி வரை வாடகை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ள நபர்களுக்கு சாதகமாக செயல்படுவதாகவும், ஏலம் நடத்தி முறைப்படுத்தி வாடகை வசூல் செய்யாது, திமுக முன்னாள் நகர செயலாளர் தங்கமலைப்பாண்டி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் சரவணன் என திமுக நிர்வாகிகளோடு அதிகாரிகள் இணைந்து, வாடகை நிலுவை வைத்திருப்பவர்களிடம் 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை என கோடிக்கணக்கில் பணம் வசூல் செய்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டியும், முறைப்படி டெண்டர் வைத்து வாடகை வசூல் செய்ய கோரி திமுக நகர் மன்ற உறுப்பினர்கள் சந்திரன், சோபனாதேவி என்ற இருவர் வெளிநடப்பு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தற்காலிக நடவடிக்கையாகவே வாடகை வசூல் செய்யும் தீர்மானத்தை கொண்டு வந்து வாடகை வசூல் செய்ய உள்ளதாகவும், அடுத்தடுத்து டெண்டர் விடுவது தொடர்பாக அரசின் விதிப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நகர் மன்ற தலைவர் தேன்மொழி தெரிவித்தார்.
திமுக நிர்வாகிகளை குற்றம் சாட்டி, திமுக கவுன்சிலர்களே நகர் மன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்த சம்பவம் உசிலம்பட்டியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.




