காரைக்கால் மாவட்டம் நிரவி கிராமத்தில் 1938ஆம் ஆண்டு திருஅருட்பிரகாச வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் சமரச சன்மார்க சங்கத்தின் சார்பில் வள்ளலார் மடம் நிறுவி செயல்பட்டு வந்த நிலையில் தற்போது வள்ளலார் மடம் மற்றும் அன்னதான கூடம் புதுப்பொலிவுடன் சீரமைக்கப்பட்டு, திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது.

இந்நிலையில் திருஅருட்பிரகாச வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் சமரச சன்மார்க சங்கத்தின் 87-ம் ஆண்டு பெருவிழாவையொட்டி திரு அருட்பா அகவல் பாராயணம் பாடப்பட்டு சன்மார்க்க கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து நாகை அருள் ஜோதி அகவல் விளக்கு மன்ற தலைவர் சௌந்தர்ராஜன் சொற்பொழிவு நடைபெற்றது. தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சி நாளான இன்று அருள்பிரகாச வள்ளலார் சமரச சன்மார்க்க சங்கம் சார்பில் ஏழு திரை நீக்கி மகா ஜோதி தரிசனம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை மற்றும் அருட்ப்ரசாதம் வழங்கப்பட்டது.
அருட்பிரகாச வள்ளலார் சன்மார்க்க சங்க நிர்வாகி மா.செல்வராஜ் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் நாக தியாகராஜன், புதுச்சேரி மாநில பாஜக துணைத் தலைவர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன், மாவட்ட பாஜக பொறுப்பாளர் மீனாட்சி சுந்தரம், குமரவேலு, சாமுண்டிமுருகயராஜா, ராஜசேகரன், மாறன் உள்ளிட்ட ஏராளமான சன்மார்க்க பக்தர்கள் கலந்து கொண்டு ஏழு திரை நீக்கிய ஜோதி தரிசனம் செய்து வள்ளலாரை வழிபட்டனர்.