மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு காலத்தை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பனை தரிசிக்க செல்லும் குருசாமிகளுக்கு படி வழங்கும் விசேஷ நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது. இதில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு குருசாமிகளுக்கு படி வழங்கி வழிபட்டார்.
கோவை, சாய்பாபா காலனி பகுதியில் உள்ள ஐயப்பன் கோவிலில் சபரிமலை செல்லும் குருசாமிகளுக்கு படி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் சாமி தரிசனம் செய்து மாலை அணிந்து விரதம் இருந்து வரும் குருசாமிகளுக்கு படி வழங்கி அவர்களது ஆசிகளைப் பெற்றார்.மேலும் பக்தர்களுடன் இணைந்து சாமியே சரணம் ஐயப்பா என முழக்கமிட்டு வழிபாட்டில் ஈடுபட்டார்.
சபரிமலை ஐயப்பன் கோவில் என்றாலே பக்தர்களின் நினைவுக்கு வருவது அந்த புனிதமான 18 படிகள் தான். ஐயப்பனை தரிசிக்க பக்தர்கள் ஒரு மண்டலம் 48 நாட்கள் கடுமையான விரதம் இருந்து இருமுடி சுமந்து செல்வார்கள், சபரிமலையில் உள்ள 18 படிகளும் தெய்வ அம்சம் கொண்டவை. அங்கு நடைபெறும் படி பூஜை மிகவும் சக்தி வாய்ந்ததாக பக்தர்களால் நம்பப்படுகிறது. இந்த படிகள் ஒவ்வொன்றும் ஒரு தத்துவத்தை உணர்த்துவதாக ஐதீகம் உள்ளது.
சபரிமலை யாத்திரை என்பது வெறும் பயணம் மட்டுமல்ல அது ஒரு ஆன்மீக ஒழுக்கம் பக்தர்களுக்கு சேவை செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என இந்த நிகழ்வின் போது அவர் குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டுச் சென்றனர்.




