• Tue. Dec 10th, 2024

இந்திய பங்கு வர்த்தகத்தை உயர்த்திய ஜி20 மாநாடு வெற்றி..!

Byவிஷா

Sep 11, 2023

டில்லியில் நடைபெற்ற ஜி20 மாநாடு வெற்றியால், இந்திய பங்கு வர்த்தகம் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய பங்கு வர்த்தகம் இன்று காலை லாப நோக்குடன் உயர்ந்து காணப்பட்டது. சென்செக்ஸ் மற்றும் நிப்டி குறியீடுகள் உயர்ந்து இருந்தன. கடந்த வெள்ளிக்கிழமையில் முடிவடைந்தபோது, சென்செக்ஸ் 66,861.16 புள்ளிகள் மற்றும் நிப்டி 19,910 புள்ளிகள் என்ற அளவில் இருந்தன. ஆனால், இன்றைய பங்கு வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிப்டி குறியீடுகள் 0.3 முதல் 0.4 சதவீதம் வரை உயர்வடைந்து உள்ளது. இன்றைய பங்கு வர்த்தகத்தில் அனைத்து பங்குகளும் உயர்வடைந்து காணப்படுகின்றன.
கடந்த வாரத்தில், 2 மாதங்களில் இல்லாத வகையில் சிறந்த வாரம் என்ற அளவில் இந்திய பங்கு வர்த்தகம் நிறைவடைந்து இருந்தது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை காணப்பட்ட நிலையை விட இன்று மும்பை மற்றும் தேசிய பங்கு சந்தைகள் உயர்வடைந்து காணப்பட்டன.
ரெயில்வே, துறைமுகம் மற்றும் உட்கட்டமைப்பு உள்ளிட்டவற்றுடன் தொடர்புடைய நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டின. டெல்லியில் 2 நாட்கள் (செப்டம்பர் 9 மற்றும் 10) நடந்த ஜி-20 உச்சி மாநாட்டில் பல்வேறு விசயங்கள் ஆலோசிக்கப்பட்டன. இதில், ஜி-20 உறுப்பு நாடுகளில் ஆப்பிரிக்க யூனியன் இணைந்துள்ளது என அறிவிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் உக்ரைன்-ரஷியா இடையேயான போர், ஜி-20 உறுப்பு நாடுகள் இடையே வர்த்தகம் உள்ளிட்டவை பற்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பிய நாடுகளுக்கான ஒரு பெரிய கப்பல் மற்றும் ரெயில் இணைப்பு வழித்தடம் விரைவில் தொடங்கப்படும் என்ற வரலாற்று ஒப்பந்தம் ஒன்றை பற்றி இந்தியா, அமெரிக்கா, சவுதி அரேபியா மற்றும் ஐரோப்பிய யூனியன் அறிவித்தன. இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, உலகளாவிய உயிரிஎரிபொருள் கூட்டணி திட்டம் தொடங்கப்பட்டது. இதுபோன்ற ஜி-20 மாநாட்டு வெற்றி எதிரொலியாக இந்திய பங்கு வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் அதிக கவனம் செலுத்தும் வகையில் அவர்களை ஈர்த்துள்ளது.