• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் பரபரப்பைக் கிளப்பும் அமலாக்கத்துறை..!

Byவிஷா

Sep 26, 2023

தமிழகத்தில் மீண்டும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தமிழகத்தில், சென்னை, தஞ்சை உள்பட 40 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சட்டவிரோதப் பணப்பரிமாற்ற முறைகேடு உள்ளிட்ட புகார்கள் தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாகக் முதல் கட்ட தகவல் வெளியாகி இருக்கிறது. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சண்முகம் என்பவரது சென்னை தியாகராய நகரில் உள்ள விஜய் அடுக்குமாடிக் குடியிருப்பிலும் சோதனை நடைபெற்று வருகிறது. தஞ்சையிலும் சண்முகத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை தி.நகர், சரவணா தெரு, திலக் தெருவில் உள்ள வீடுகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரியல் எஸ்டேட் தொழிலில் நிலம் வாங்கியது, விற்பனை செய்ததில் சட்டவிரோதப் பணப்பரிமாற்ற முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரை அடுத்து இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
கேரளாவில் நேற்று 12-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர் 300 பேர் குவிக்கப்பட்டு பாதுகாப்புடன் 12 இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்றது.
சமீபத்தில் தமிழகத்தில் சென்னை உட்பட புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 34 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி இருந்தனர். தொழிலதிபர் வீடுகள் மற்றும் அவர்களுக்குத் தொடர்புடையவர்களின் இடங்களில் பரபரப்பாக நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத 12.83 கோடி ரூபாய் வங்கியில் உள்ள பணம் முடக்கப்பட்டது. கணக்கில் வராத ரூ.2.33 கோடி ரொக்கமாகப் பறிமுதல் செய்யப்பட்டது. ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது பரபரப்பை கிளப்பியுள்ளது.