• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தை “கொலை, கொள்ளை, தற்கொலை” என்ற பாதைக்கு திமுக அரசு அழைத்துச் செல்கிறது – ஓபிஎஸ்

ByA.Tamilselvan

May 21, 2022

திமுக அரசு கொலை,கொள்ளை,தற்கொலை என்ற பாதைக்கு தமிழகத்தை அழைத்துச்சென்று கொண்டிருக்கிறது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “காவல் துறையினரை பார்த்து சமூக விரோதிகள் அஞ்சுகிறார்கள் என்றால் அந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு சீராக இருக்கின்றது என்று பொருள். ஆனால், தற்போது தமிழகத்தில் இதற்கு முற்றிலும் நேர்மாறான சூழ்நிலை நிலவுகிறது. “அமைதி, வளம், வளர்ச்சி” என்ற பாதையில் சென்று கொண்டிருந்த தமிழகத்தை “கொலை, கொள்ளை, தற்கொலை” என்ற பாதைக்கு திமுக அரசு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது.
திமுக எப்பொழுதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்பொழுதெல்லாம் தமிழகம் அமளிக் காடாக மாறிவிடுகிறது என்பதில் யாருக்கும் இருவேறு கருத்து இருக்க முடியாது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவுக்கு சீரழிந்து போயிருக்கிறது என்பதற்கு பல உதாரணங்கள் இருந்தாலும், அவற்றில் அண்மையில் நடந்தவற்றை இங்கே சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும்.
மயிலாப்பூரில் ஆடிட்டர் மற்றும் அவரது மனைவி கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டது; தேனி மாவட்டம், பெரியகுளத்தைச் சேர்ந்த நகைக்கடை ஊழியர் ராமராஜ் என்பவர் பூந்தொட்டியால் தாக்கி கொலை செய்யப்பட்டது; கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சபரி கணேஷ் என்பவர் சென்னை விமான நிலைய கார் நிறுத்தக் கட்டடத்தில் மர்ம மரணம்;
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த வட சிறுவளூர் கிராமத்தைச் சேர்ந்த ஜேசிபி ஒட்டுனர் தீபன் அடித்துக் கொலை; சென்னை ஆர்.கே. நகரில் போதை மாத்திரை விவகாரத்தில் இளைஞர் ராகுல் படுகொலை; பாடி மேம்பாலத்தின் கீழ் அய்யப்பன் என்கிற தொழிலாளி அடித்துக் கொலை; தென்காசியைச் சேர்ந்த நெல் வியாபாரி பட்டுராஜ் அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள ஒரத்தியில் அடித்துக் கொலை; சென்னையில் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் குமரேசன் வெட்டி கொலை; என படுகொலைகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நடந்தேறி வருகின்றன.
இது மட்டுமல்லாமல், சாதி மோதல்கள் ஆங்காங்கே அதிகரித்து வருவதாகவும், திமுகவினரின் அராஜகம் காரணமாக காவல் துறையினரும், அரசு ஊழியர்களும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும், இதன் காரணமாக தற்கொலைகள் நிகழ்ந்து வருவதாகவும், திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து பாலியல் தொல்லைகள், கொள்ளைச் சம்பவங்கள் அன்றாடம் நடைபெற்று வருவதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை தமிழகத்தில் நிலவுகிறது. இந்த நிலைமை நீடித்தால் சட்டம்-ஒழுங்கு என்பதே இல்லாமல் போய்விடும்.
எனவே, தமிழக முதல்வர் தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாக விளங்கும் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கையினை எடுக்க வேண்டுமென்று அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.