• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மலேசிய பக்தரின் கனவை நனவாக்கிய தம்பதிகள்..!

Byவிஷா

Mar 10, 2023

மலேசிய பக்தர் ஒருவரின் கனவை நனவாக்கும் வகையில், காஞ்சிபுரம் பட்டுச்சேலையில் லலிதாசகஸ்ரநாம ஸ்தோத்திரங்களை வடிவமைத்து அசத்தியிருக்கின்றனர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நெசவாளர்களான தம்பதிகள்.
காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோவில் தோப்புத் தெருவில் வசிப்பவர்கள் குமரவேல்- கலையரசி தம்பதி. பட்டுச்சேலை வடிவமைப்பு, கைத்தறி நெசவு தொழில் செய்து வரும் இவர்கள், வாடிக்கையாளர்கள் விரும்பும் உருவங்களை பட்டு சேலையில் வடிவமைத்து கைத்தறியில் நெசவு செய்து தயாரித்து வழங்கி வருகின்றனர். இவர்களின் செயல் குறித்து அறிந்த காஞ்சி காமாட்சி அம்மனின் தீவிர பக்தரான மலேசியாவை சேர்ந்த நாராயணமுர்த்தி என்பவர் காஞ்சிபுரம் பட்டு சேலையில் காஞ்சி காமாட்சி அம்மனின் புகழினை பாடும் லலிதா சகஸ்ரநாம ஸ்தோத்திரங்களை வடிவமைத்து அம்மனுக்கு சமர்ப்பிக்கும் தனது 12 ஆண்டு கால கனவினை நிறைவேற்றித் தர முடியுமா என குமரவேல்-கலையரசி தம்பதியினரை அணுகியுள்ளார்.
மலேசிய பக்தரின் கனவினை நினைவாக்கும் வகையில் பட்டுச்சேலை வடிவமைப்பாளர்களான இந்த தம்பதி, அதற்கான வேலையில் ஈடுபட்டு கணினியில் லலிதா சகஸ்ரநாம அர்ச்சனையின் ஸ்லோகங்களை எழுத்துப் பிழையின்றி வடிவமைத்து, மலேசியா பக்தர் நாராயண மூர்த்தியிடம் காட்டி சேலை நெசவு செய்ய அனுமதியை பெற்றுள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த தம்பதியினர், விரதம் இருந்து தக்காளி சிகப்பு நிற தூய பட்டு நூலில், அசல் வெள்ளி ஜரிகையை பயன்படுத்தி காமாட்சி அம்மனின் புகழ் பாடும் ‘லலிதா சகஸ்ரநாம’ அர்ச்சனையின் 1000 ஸ்லோகங்களையும், பட்டுச்சேலையில் உடல் முழுவதும் வரும்படியும், சேலையில் முந்தானையில் லலிதா சகஸ்ர நாமத்தை ஹயக்ரீவர், அகத்தியருக்கு உபதேசிக்கும் காட்சியும், அதை காஞ்சி காமாட்சி அம்மன் உற்று நோக்கும் காட்சியை தத்ரூபமாக நெசவு செய்து தயாரித்து முடித்துள்ளனர்.
காஞ்சி பட்டு சேலையை நெசவு செய்ய 700 கிராம் நவ வர்ணம் எனும் 9 வகையான பட்டு நூலையும் 600 கிராம் தூய அசல் வெள்ளிச் ஜரிகை நூலையையும் பயன்படுத்தி 1 கிலோ 300கிராம் எடையுள்ள 18 முழம் பட்டு சேலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் வைத்து பூஜை செய்து மாசி மகம் தின மான காமாட்சியம்மன் தீவிர பக்தரான நாராயண மூர்த்தியிடம் வழங்கியுள்ளனர். இது குறித்து பட்டுசேலையை வடிவமைத்த தம்பதிகள், இதுவரை நாங்கள் பல்வேறு சுவாமி உருவங்களை வடிவமைத்து சேலைகளை நெசவு செய்திருந்தாலும், மலேசிய பக்தரின் 12 ஆண்டு கால கனவை நனவாக்கியிருப்பது பெருமைப்பட வைக்கிறது என்று தெரிவித்தனர்.
இந்த சேலை குறித்து மலேசிய பக்தரான நாராயணமூர்த்தி கூறுகையில், காஞ்சி காமாட்சி அம்மனின் தீவிர பக்தனாகிய நான், லலிதா சகஸ்ரநாம ஸ்லோகங்களுடன் கூடிய பட்டுப் புடவையை அம்பாளுக்கு சமர்ப்பணம் செய்ய கடந்த 12 ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் முயற்சிகள் மேற்கொண்ட நிலையில், இப்பொழுது சக்தி பீடங்களில் அம்பாளின் ஒட்டியான பீடமாக விளங்கும் காஞ்சிபுரத்திலேயே மாசி பிரம்மோற்சவம் நடைபெற்று வரும் இந்நாளில் நிறைவேறியிருப்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த காஞ்சிபுரம் பட்டு சேலையை, காமாட்சி அம்மனின் பரிபூரண அனுக்கிரகத்தோடு மலேசியாவில் உள்ள நாராயணி மகா மாரியம்மன் கோவில் சமர்ப்பிக்க இருப்பதாகவும், இதைத்தொடர்ந்து காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கும், மயிலாடுதுறையில் உள்ள திருமீய்ச்சூர் ஸ்ரீ லலிதாம்பிகை அம்மனுக்கும் சாற்றி சமர்ப்பணம் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.