• Sat. Mar 22nd, 2025

மகளிர் உரிமைத்தொகை விவகாரத்தில் செக் வைத்த தம்பதிகள்..!

Byவிஷா

Oct 7, 2023

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு நான்கு சக்கர வாகனம் இருப்பதால் மகளிர் உரிமைத்தொகை ரத்து செய்யப்படுகிறது என வந்த குறுந்தகவலால், அந்தத் தம்பதிகள் தற்போது மாவட்ட ஆட்சியரிடம் தங்களது நான்கு சக்கர வாகனத்தை கண்டுபிடித்து தருமாறு செக் வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தென்கரை பேரூராட்சிக்குட்பட்ட கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி ராமமூர்த்தி. இவரது மனைவி ஷீலா, தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால், அவரிடம் நான்கு சக்கர வாகனம் இருப்பதாகவும், அதனால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகவும் செல்போனுக்கு மெசேஜ் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர் ராமமூர்த்தி, கடந்த 25ஆம் தேதி உரிமைத்தொகை வழங்காததற்கு காரணம் நான்கு சக்கர வாகனம் இருப்பதாக கூறியதால், தங்கள் நான்கு சக்கர வாகனத்தை கண்டுபிடித்து தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். அந்த மனு தென்கரை காவல்நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதையடுத்து, விசாரணைக்கு சென்ற ராமமூர்த்தி, தனது பெயரிலோ, தனது மனைவி பெயரிலோ கார் இருப்பதாகக்கூறி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகவும், அதனால் அந்த காரை கண்டுபிடித்து தருமாறு கூறியுள்ளார்.
இந்த சம்பவங்களைப் பார்த்தால், ஐயா, என் கிணத்தை காணோம், கிணத்த காணோம் என்று படபப்புடன் நடித்துக் காட்டிய வடிவேலு பட காமெடி போன்று புகார் அளிக்கப்பட்டுள்ளதால், காவல்துறையினர் செய்வதறியாது திகைத்துள்ளனர்.