மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் இந்தாண்டு கோடை சீசனுக்காக வரும் இலட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க பல்வேறு கோடை விழாக்கள் நடைப்பெற்று வருகிறது. கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக கடந்த 3ம் தேதி கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் துவங்கியது.

இதனை தொடர்ந்து உதகை ரோஜா பூங்காவில் 20வது ரோஜா கண்காட்சி கடந்த 10ம் தேதி துவங்கி நேற்று நிறைவடைந்தது.
இந்நிலையில் கோடை விழாவின் ஒரு நிகழ்ச்சியாக சுற்றுலாத்துறை சார்பில் இன்று உதகை படகு இல்லத்தில் படகு போட்டிகள் நடைப்பெற்றது. இந்த படகு போட்டிகளை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த படகு போட்டியில் ஆண்கள் இரட்டையர் போட்டி, பெண்கள் இரட்டையர் போட்டி, தம்பதியினர் போட்டி, பத்திரிக்கையாளர்களுக்கான போட்டி, படகு இல்லத்தில் பணிபுரியும் ஊழியர்க்கான போட்டி என தனித் தனியாக நடைப்பெற்றது.
தம்பதியினர்களுக்கான போட்டியில் பாண்டிச்சேரியை சேர்ந்த சதீஷ்குமார் & மஞ்சமாதா தம்பதியினர் முதலிடத்தையும், கோவாவை சேர்ந்த ஸ்டீபன் & ரோவன் தம்பதியினர் இரண்டாவது இடத்தையும், மூன்றாவது இடத்தை கேரளாவை சேர்ந்த அல்தாப் & சிஹா பிடித்தனர்.
ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் கேரளாவை சேர்ந்த சேண்டி ஜான், கேரளாவை சேர்ந்த சாஜி முதல் இடத்தையும், முகமது சையது, மெர்வின் இரண்டாவது இடத்தையும், கேரளாவை சேர்ந்த நோபல் சேண்டி, பிஜாஸ் பசீர் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு வெற்றி கோப்பைகளை வழங்கி கெளரவித்தார்.








