• Sat. May 4th, 2024

புதிய ஜல்லிக்கட்டு மைதானத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்..!

Byவிஷா

Jan 24, 2024

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், கீழக்கரை கிராமத்தில் புதியதாக கட்டப்பட்டு, கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழரின் வீரவிளையாட்டு போட்டியாக கருதப்படும் ஜல்லிக்கட்டு போட்டியானது ஆண்டுதோறும் தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. ஆனால் அங்கு பார்வையாளர்கள் பார்க்கும்படியான வசதிகள் முழுமையாக இல்லை. இதனால், பார்வையாளர்களை கருத்தில் கொண்டு அனைவரும் பார்க்கும்படியாக பிரமாண்ட ஜல்லிக்கட்டு மைதானத்தை அலங்காநல்லூர் கீழக்கரை கிராமத்தில் வகுத்தாமலை அடிவாரத்தில் தமிழக அரசு பிரமாண்டமான ஜல்லிக்கட்டு மைதானத்தை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு, 44 கோடி ரூபாயில் 66 ஏக்கர் பரப்பளவில் கட்டி முடித்தது.
16 ஏக்கரில் மட்டும் ஏறுதழுவதல் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அரங்க கட்டிடட பரப்பளவு 77,683 சதுரஅடியாகும். இதில் சுமார் 4500க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் ஒரே நேரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுரசிக்கமுடியும். இந்த மைதானமானது முதலில் பொங்கல் தினத்தை முன்னிட்டு திறக்கப்பட இருந்தது. அதன் பிறகு திறக்கும் தேதி தள்ளிவைக்கப்பட்டு இன்று (ஜனவரி 24) திறக்கப்படும் அறிவிக்கப்பட்டது.
“கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்” என பெயரிடப்பட்ட இந்த மைதானத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டு அதற்கான விழா ஏற்பாடுகள் வெகு தீவிரமாக நடைபெற்று வந்தன. முதலில் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் 300 மாடுபிடி வீரர்களில் முதற்சுற்று வீரர்களான 50 வீரர்கள் ஜல்லிக்கட்டு மைதானத்தில் போட்டிக்கான உறுதிமொழியை எடுத்துக்கொண்டு ஜல்லிக்கட்டு காளைகளை எதிர்கொள்ள தயார் நிலையில் இருந்தனர். ஜல்லிக்கட்டு மைதானத்தை திறந்து வைக்க மதுரை வந்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், சில நிமிடங்களுக்கு முன்னர் விழா மேடைக்கு வருகை புரிந்தார். உடன், அமைச்சர்கள் மூர்த்தி, பெரியசாமி, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளனர். அதன் பின்னர், கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் மைதானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் 500 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இன்று முதல் பரிசை வெல்லும் ஜல்லிக்கட்டு காளையின் உரிமையாளருக்கும் மற்றும் மாடுபிடி வீரருக்கும் தலா ஒரு மஹிந்திரா தார் கார் பரிசாக வழங்கப்படும் எனவும் தலா 1 லட்ச ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *