• Fri. May 3rd, 2024

சென்னையில் காவலர் தாக்கப்பட்ட விவகாரம்.., வடமாநிலத் தொழிலாளர்கள் 28 பேர் கைது..!

Byவிஷா

Oct 28, 2023

சென்னை அம்பத்தூரில் முதல்நிலை காவலர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, வடமாநிலத் தொழிலாளர்கள் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பட்டறைவாக்கம் சாலையில் தனியார் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இங்கு பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 300-க்கும் மேற்பட்டோர் அங்கேயே தங்கி பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 23 ஆம் தேதி ஆயுத பூஜையை கொண்டாடிய தொழிலாளர்கள், இரவு மது அருத்திய போது, அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம், கைகலப்பாக மாறியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த தொழிற்சாலையின் உரிமையாளர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் அங்கு வந்த ரகுபதி, ராஜ்குமார், வாசிம் ஆகிய ரோந்து காவல்துறையினர், தொழிற்சாலை உள்ளே சென்று வடமாநிலத்தவர்களிடம் விசாரித்துள்ளனர். அப்போது போலீசாரையும் வடமாநில தொழிலாளர்கள் தாக்கத் தொடங்கியுள்ளனர்.
இதில் ராஜ்குமார், வாசிம் ஆகிய இருவரும் தங்களது இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டு தப்பியோட, அங்கு வந்த முதல்நிலை காவலர் ரகுபதியை கட்டையால் முதுகிலும், கன்னத்திலும் தாக்கினர். இதில் ரகுபதிக்கு பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து, மற்ற காவலர்கள் அவரை மீட்டு அத்திப்பட்டு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே வழக்குகள் பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், இன்று இது தொடர்பாக வடமாநிலத்தைச் சேர்ந்த 28 பேரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *