• Fri. Mar 29th, 2024

இலங்கை அரசு பாதுகாக்கும் புனித யானையின் உடல்..

இலங்கை மக்களினால் தெய்வீக யானையாக கருதப்பட்ட நெதுன்கமுவே ஹஸ்தி ராஜா என்ற யானை உயிரிழந்த நிலையில், அதனின் உடலை தேசிய பொக்கிஷமாக அறிவித்து, பாதுகாக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தனவிற்கு இதுகுறித்து பணிப்புரை விடுத்துள்ளார்.
எதிர்கால சந்ததியினரின் பார்வைக்காக நெதுன்கமுவே ஹஸ்திராஜாவின் உடலைப் பாதுகாக்குமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

தேசிய அருங்காட்சியக அதிகாரிகள் குழுவொன்று, ஹஸ்திராஜா இருந்த கம்பஹா வெலிவேரிய நெதுன்கமுவ பகுதிக்குச் சென்று, யானையின் உடலை தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.

இந்தியாவின் மணிப்பூர் பகுதியில் 1953ம் ஆண்டு பிறந்த நெதுன்கமுவே ஹஸ்தி ராஜா, தனது 69வது வயதில் இறந்துள்ளது.
கம்பஹா நெதுன்கமுவே பகுதியிலுள்ள தர்மவிஸய ஆயுர்வேத வைத்தியர் இந்த யானையை இந்தியாவிலிருந்து தனது பொறுப்பிற்கு எடுத்துள்ளார்.

அந்த காலக்கட்டத்தில் 75,000 ரூபாவிற்கு இந்த யானையை வாங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு வாங்கப்பட்ட யானை, இலங்கையின் பௌத்த விவகார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 10 அடியை கொண்ட இந்த யானை, அனைத்து இனத்தவர்களின் கௌரவத்தை தனதாக்கிக் கொண்டது.

இலங்கையின் பௌத்த விஹாரைகளில் முன்னணி விஹாரையாக திகழும், கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வருடாந்தம் நடைபெறும் உற்சவத்தில், புத்த பெருமானின் புனித சின்னமாக கருதப்படும் ‘கரடுவ” வை இந்த யானையே தனது தோல் மீது சுமந்து செல்லும்.
கண்டி புனித ஸ்ரீ தலதா மாளிகையின் புனித சின்னத்தை ஏந்தி செல்வதனால், பௌத்தர்கள் மாத்திரமன்றி, இலங்கையில் உள்ள அனைத்து இன மக்களின் புனித யானையாக இந்த யானை கருதப்பட்டது.

கடந்த ஆண்டு நடைபெற்ற உற்சவத்தின் போது, புனித சின்னத்தை ஏந்தி சென்ற நெதுன்கமுவே ஹஸ்தி ராஜா, தனது பயணத்தின் போது விரிக்கப்படும் வெள்ளை நிற கம்பலம் ஒதுங்கியிருந்ததை பார்த்து அதை சரி செய்து, முன்னோக்கி நடந்தது, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

2005ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையான காலம் வரை நெதுன்கமுவே ஹஸ்தி ராஜாவே, கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் புனித சின்னத்தை, உற்சவத்தில் ஏந்தி சென்றுள்ளது.
தந்தங்கள் இரண்டும் ஒருமித்த வகையில் அமைந்துள்ளமை இந்த யானையின் விசேட அம்சமாகும்.

மேல் மாகாணத்தில் கம்பஹா மாவட்டத்திலிருந்து மத்திய மாகாணத்தில் இருக்கும் கண்டி நகருக்கு சுமார் 90 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. கண்டி உற்சவ காலப் பகுதியில் இந்த 90 கிலோமீட்டரை விடவும் அதிக தூரத்தை, நெதுன்கமுவே ஹஸ்தி ராஜா நடந்தே வருவது விசேடமான விடயமாகும். இந்த யானை கம்பஹாவிலிருந்து கண்டி நோக்கி நடந்தே வருவதுடன், குறித்த யானைக்கு இலங்கை அரசாங்கத்தினால் அதிவுயர் பாதுகாப்பு வழங்கப்படுவது வழக்கமாகும்.

குறிப்பாக நெதுன்கமுவே ஹஸ்தி ராஜாவிற்கு, விசேட அதிரடி பாதுகாப்பு மற்றும் இராணுவ பாதுகாப்பு வழங்கப்படும்.
ஒரு சந்தர்ப்பத்தில் கூட இந்த யானை வாகனத்தில் பயணிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
யானையின் உரிமையாளரான நெதுன்கமுவே தர்மவிஜய யானையின் இறப்பு குறித்து பேசுகையில், ”மிருகங்கள் மிகவும் கஷ்டப்பட்ட உயிரிழப்பதே வழக்கமானது, எனினும், திடீர் மரணம் என்பது மிகவும் குறைவாகவே ஏற்படும். இடி மின்னல் தாக்கம், வாகன விபத்துக்கள் போன்றவற்றால் மிகவும் கஷ்டப்பட்டே மிருகங்கள் இறக்கும். ஆனால், இந்த யானை ஒரு நாள் மட்டுமே உணவு உட்கொள்ளாது, இன்று காலை நாம் பார்த்துக்கொண்டிருக்கும் போதே நித்திரை கொண்டது. அவ்வாறே அதன் உயிர் பிரிந்தது. எந்தவித கஷ்டத்தையும் எதிர்நோக்காது இந்த யானை இறந்தது. இவ்வாறு ஒரு உயிர் பிரியுமானால், அது அஷ்டவசமானது. கலாசார ரீதியில் இது வருத்தம்தர கூடிய செய்தியானாலும், ஒரு விலங்காக அந்த யானை வெற்றிப் பெற்றுள்ளது” என தெரிவித்தார்.

இந்த நிலையில், பௌத்த அனுஷ்டானங்களுக்கு அமைய இறுதி கிரியைகளை பௌத்த மத குருமார்கள் நடத்தியிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, இந்த யானை தேசிய பொக்கிஷமாக பாதுகாக்கும் வகையில் இலங்கை அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *