• Sat. Oct 10th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

இந்திய ஊட்டச்சத்து சங்கத்தின் 58-வது தேசிய மாநாடு..,

BySeenu

Oct 10, 2026

​கோவை அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில், இந்திய ஊட்டச்சத்து சங்கத்தின் (Nutrition Society of India – NSI) 58-வது வருடாந்திர மாநாடு 2026 அக்டோபர் 8 முதல் 10 வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் 2030-ஆம் ஆண்டின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளை முன்னிறுத்தி, ‘உணவு மற்றும் ஊட்டச்சத்து – யாரையும் விட்டுவிடக் கூடாது’ (Food and Nutrition – Leaving No One Behind) என்ற கருப்பொருளில் இந்த மாநாடு அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் மற்றும் எளிய விளிம்புநிலை மக்களுக்குச் சத்தான உணவு சமமாகக் கிடைப்பதை உறுதி செய்வதற்கான உத்திகள் குறித்து இம்மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்படுகிறது.

​ தொடக்க விழாவில், அவிநாசிலிங்கம் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரும், பல்கலைக்கழக வேந்தருமான டாக்டர் தி.ச.க. மீனாட்சிசுந்தரம் வேந்தர் உரையாற்றி, ஆரோக்கியமான தேசத்தை உருவாக்குவதில் ஊட்டச்சத்து நிபுணர்களின் கடமையை வலியுறுத்தினார். பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் வி. பாரதி ஹரிசங்கர் தொடக்க உரையாற்றுகையில், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட NSI அமைப்பின் முக்கியத்துவத்தையும், பசியின்மையை உறுதிப்படுத்துவதையும் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து, இந்திய ஊட்டச்சத்து சங்கத்தின் செயலாளர் டாக்டர் சுப்பாராவ் ஜி. அறிக்கையைச் சமர்ப்பிக்க, சங்கத்தின் தலைவர் டாக்டர் சரத் கோபாலன் தலைமை உரையாற்றினார். தம் உரையில் டாக்டர் சரத் கோபாலன், இந்தியாவில் ஊட்டச்சத்துக் குறைபாட்டைத் தடுப்பதும், அனைவருக்கும் சமமான ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்வதும், புதிய ஊட்டச்சத்துப் பொருட்களை உருவாக்குவதும் முக்கிய நோக்கம் என்று குறிப்பிட்டார்.

பல்கலைக்கழகப் பதிவாளர் டாக்டர் இந்து வாழ்த்துரையில், ‘பசியற்ற ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க அன்னதானத்தின் கண்ணியம், சமத்துவம் மற்றும் நிலையான வளர்ச்சி இலக்கு 2 ஆகியவற்றை ஒன்றிணைக்க வேண்டும்’ எனக் கூறினார். NITI ஆயோக் கௌரவ உறுப்பினர் டாக்டர் ஆ. ஸ்ரீனிவாசன் “அனைவருக்கும் ஊட்டச்சத்தை உறுதி செய்தல்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றி, நடைமுறையிலுள்ள ஊட்டச்சத்து திட்டங்களின் செயல்திறனை மதிப்பிட வேண்டும் எனத் தெரிவித்தார்.
​

நிகழ்வில் மாநாட்டு மலர் வெளியிடப்பட்டதோடு, காலை 10.30 மணிக்குச் சிறப்பு அழைப்பாளர்களால் கண்காட்சி அரங்குகளும் திறந்து வைக்கப்பட்டன. மனையியல் புல முதன்மையர் பேராசிரியர் சில்வியா சுப்பிரியா வரவேற்புரையும், மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் P. ராஜேஸ்வரி நன்றியுரையும் ஆற்றினர்.

இந்தியா முழுவதிலும் இருந்து 800-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இம்மாநாட்டின் ஒரு பகுதியாக, அக்டோபர் 8 அன்று உணவுத் தொழில்நுட்பம், சுற்றுக்சூழலுக்கு உகந்த பேக்கேஜிங் மற்றும் ஊட்டச்சத்துத் தகவல் தொடர்பு ஆகிய தலைப்புகளில் மூன்று சிறப்புப் பயிலரங்குகள் நடைபெற்றன.