அகஸ்தீஸ்வரம் நாடான்குளம் – கொட்டாரம் இடைப்பட்ட பகுதியில் உள்ள பன்றி குன்று குளம் உடைந்ததால், சுமார் 50 ஏக்கர் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த பகுதியில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், குளத்தின் நடுவே பாலம் கட்டும் பணி நடந்தது. பணிகள் தடைபடாமல் இருக்க குளத்தின் கரையை அகற்றி தற்காலிக கரை அமைக்கப்பட்டது. தற்போது பாலப்பணி முடிந்த நிலையில், அந்த தற்காலிக கரையை அகற்றிய போது உடைப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக பன்றி குன்று குளத்திலிருந்து தண்ணீர் அருகிலுள்ள ராமர் குளத்தை நோக்கி வேகமாக பாய்ந்தது. ராமர் குளமும் முழு கொள்ளளவை எட்டியதால், அங்கும் கரை உடைந்து ஞானப்பால் பற்று பகுதியிலுள்ள நெற்பயிர்கள் முழுவதும் நீரில் மூழ்கின.
மேலும் வெள்ளத்துடன் வந்த மணல் வயல்களில் படிந்து, நெல் வயல்கள் மணல் மேடாக மாறியுள்ளன. அருகிலுள்ள தென்னை, வாழை தோப்புகளிலும் தண்ணீர் தேங்கியதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
பன்றி குன்று குளம் மூலம் பாசனம் பெற்றுவந்த நிலங்களும் தற்போது பயன்பாடின்றி பாதிக்கப்பட்டுள்ளன. இந்த தகவல் அறிந்ததும், முன்னாள் அமைச்சரும் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய் சுந்தரம் இன்று நேரில் சென்று பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பார்வையிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உடனடியாக உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பன்றி குன்று குளத்தின் உடைப்பை தேசிய நெடுஞ்சாலைத் துறை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். இதற்கான நிதியை உடனடியாக ஒதுக்கி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
இந்த ஆய்வின் போது அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் தினேஷ், பேரூர் கழகச் செயலாளர் சிவபாலன், வார்டு கவுன்சிலர் விஜயன், கழக நிர்வாகிகள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.




