திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காளிவேலம்பட்டியை சேர்ந்த பால்ராஜ் என்பவர் பெருமாநல்லூர் பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கு குடோனை வாடகைக்கு விட்டுள்ளார்.

பிரபாகரன் கடந்த ஆறு மாதங்களாக பழைய கழிவு பஞ்சுகளை சேமித்து வைத்து நூல் தயாரிக்கும் ஆலையை நடத்தி வருகிறார். இன்று காலை வழக்கம் போல ஆலையை இயக்க தொடங்கியபோது கழிவுப்பஞ்சுகள் சேமித்து வைத்திருந்த பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் தீ ஆலை முழுவதுமாக பரவி சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சுகள் மற்றும் இயந்திரங்கள் எரிந்து சேதமாகியுள்ளன.

தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் சுமார் ஒரு மணி நேரமாக ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் கூடுதல் தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு தீயினை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு தறை வீரர்கள் போராடி வருகிறார்கள்.
இந்த தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் கரும் புகைமூட்டம் சூழ்ந்துள்ளது. இந்த தீ விபத்து குறித்து பல்லடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.