காரைக்கால் அடுத்த திருநள்ளார் பேருந்து நிலையம் அருகில் உள்ள பிடாரி கோவில் தெருவில் மின் கசிவினால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் மெக்கானிக் பட்டறை, கோழி கடை மற்றும் அதன் அருகில் இருந்த மூன்று வீடுகள் தீயில் கொழுந்து விட்டு எறிந்தது. மேலும் வீட்டில் உள்ள மின்சாதன பொருட்கள் வெடித்து சிதறியது. வீட்டில் இருந்தவர்கள் தீ விபத்து ஏற்பட்டவுடன் வெளிவந்ததால் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

தகவல் அறிந்து இரண்டு தீயணைப்பு வாகனங்களில் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து காரணமாக ஏற்பட்ட புகையால் வீட்டில் இருந்த மூதாட்டிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதை அடுத்து அரசு மருத்துவமனைக்கு முதலுதவிக்கு அனுமதிக்கப்பட்டார்.

விபத்து குறித்து திருநள்ளாறு ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் தாசில்தார் சண்முக ஆனந்தன் விசாரணை செய்து வருகின்றனர். திடீர் தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.