தென்காசி மாவட்டம் இலத்தூரை சேர்ந்த நாகராஜன் தனியார் கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டு தனக்கு பிடித்த பேஷனான சிற்பங்களை பென்சில் கொண்டு சிற்பங்களை தத்ரூபமாகவரைந்து அதனை தனியார் மற்றும் அரசு பொருட்காட்சி ஓவிய கண்காட்சியில் விற்பனையும் செய்து வருகிறார்.
பலரும் சமூக வலைதளங்களில் வரைந்து அதிக லாபம் ஈட்டி வரும் இந்த சூழலில், தனக்கு சிற்பங்கள் மீது கொண்ட காதலால், சிற்பங்களை கோவிலுக்கு நேரில் சென்று வரைந்தும், அல்லது புகைப்படம் எடுத்து வந்து தத்ரூபமாக வரைந்து அசத்தி வருகின்றார் நாகராஜன். சோழர்கால சிலைகள், வெளிநாட்டு அருங்காட்சியகத்தில் இருக்கும் அரிய வகை சிற்பங்கள், சுவாமி சிலைகள் என பல அரிய வகை சிற்பங்களை தேடி தேடி வரைந்து வருகின்றார். மேலும், இதனை வரைவதற்கு நான்கு மணி நேரத்தில் இருந்து 2 நாள் வரை செலவாகும் என்றும் சொல்கின்றார் நாகராஜன்.
நாகராஜனுக்கு 2ம் வகுப்பில் இருந்தே, ஓவியங்கள் மீது அதிக காதல் இருந்ததாகவும் தனது ஆசிரியர் கொடுத்த ஊக்கத்தினால் தொடர்ந்து வரைய தொடங்கியதாகவும் கூறினார். மேலும், நான்கு வருடத்திற்கு முன்பாக சிற்பி சீனிவாசனின் புகைப்படங்களை பார்த்து சிற்பங்கள் ஓவியங்கள் மீது கொண்ட ஆர்வம் இன்னும் அதிகரித்ததாகவும் கூறினார்.