• Thu. Jan 8th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஆன்லைனில் தேர்வு நடத்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தல்

Byகாயத்ரி

Nov 20, 2021

வரவுள்ள கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் வாயிலாக நடத்த வேண்டும் எனத் தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:


“கொரோனா நோய்த்தொற்று காரணமாகத் தமிழகம் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகப் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. பின்னர் மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில், தற்போது பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.


கடந்த செப்டம்பர் மாதம் முதல் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடந்து வந்தாலும் பண்டிகைகள், பருவமழை என அடிக்கடி விடுமுறை விடப்படுவதால், கல்லூரிகளில் நடப்புத் தேர்வுக்கான பாடங்கள் முழுமையாக முடிக்கப்படவில்லை என மாணவர்கள் கூறுகின்றனர். மேலும் ஆன்லைனில் வகுப்புகள் சரியாக நடைபெறவில்லை. ஆன்லைன் வகுப்புகளை எங்களால் சரிவர கவனிக்க முடியவில்லை என மாணவர்களே தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற சூழலில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாகவே நடத்தப்படும் என்று தமிழக அரசு பிடிவாதமாக இருப்பது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் வகுப்புகளில் பாடங்களை முழுமையாக உள்வாங்க முடியாத நிலையில், நேரடித் தேர்வுகள் நடத்தப்பட்டால், தேர்வில் தோல்வி அடைந்து விடுமோ என்ற அச்சம் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.மேலும் நேரடித் தேர்வுகள் நடத்த தமிழக அரசு இரண்டு மாத கால அவகாசம் வழங்கினாலும், அதற்குள் மாணவர்கள் தயாராவார்களா என்பது கேள்விகுறியே. எனவே மாணவர்களின் நலன் கருதி, நடப்பு செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் முறையிலேயே நடத்த வேண்டும். ஆன்லைனில் தேர்வுகளை நடத்தக் கோரி போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும் தமிழக அரசு உடனே திரும்ப பெற வேண்டும்”.இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.