மதுரை முடக்கு சாலை பாஸ்போர்ட் அலுவலகம் அருகே நடராஜ் நகர் ஆபிஸர் காலனி அமைந்துள்ள எரிவாயு மயானத்தில், உடல் தகனத்தின் போது எழும் புகை மேல்நோக்கிச் செல்லாமல் ஜன்னல் வழியாக வெளியேறுவதால், சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக புகார் எழுந்துள்ளது.

மின் மயானத்தில் உடலை எரிக்கும் சமயங்களில், அதிக அளவில் புகை வெளியேறி அருகிலுள்ள வீடுகளுக்குள் பரவுவதால் மூச்சுத் திணறல், கண் எரிச்சல் உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் மற்றும் நோயாளிகள் அதிகமாக பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இறுதி சடங்குகளுக்காக உடலை எரிக்க வரும் உறவினர்கள் மற்றும் பொதுமக்களும், மின் மயானத்தின் உள்ளே மற்றும் சுற்றுப்புறங்களில் புகை மூட்டத்தால் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாநகராட்சி மற்றும் எரிவாயு தகனம் செய்யும் நிர்வாகம் அதிகாரி உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, புகை வெளியேற்றும் அமைப்புகளை சீரமைத்து, பொதுமக்களின் நலன் கருதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

எரிவாயு மயானத்தில் பயன்படுத்தப்படும் தகன இயந்திரத்தின் புகை வெளியேற்றும் அமைப்பில் தற்காலிக தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரணமாக, புகை மேல்நோக்கிச் செல்லாமல் ஜன்னல் வழியாக வெளியேறியுள்ளது. இது நிரந்தர பிரச்சினை அல்ல என தெரிவித்துள்ளனர்.
மேலும், புகை வெளியேற்றும் குழாய் மற்றும் வடிகட்டி அமைப்புகளை உடனடியாக ஆய்வு செய்து சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இனி இதுபோன்ற பாதிப்பு ஏற்படாமல் நிரந்தர தீர்வு காணப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.




