• Thu. May 2nd, 2024

பழனி நகராட்சியில் தண்ணீர் குழாயோடு அமைத்த தார்ச்சாலை..!

Byவிஷா

Feb 24, 2023
பழனி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள அடிகுழாயோடு சேர்த்து தார்ச்சாலை அமைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை பாதிப்படையச் செய்திருக்கிறது. 
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இங்கு உள்ள 7வது வார்டு பகுதிக்கு உட்பட்ட கீழ் வடம் போக்கி தெருவில் நகராட்சி சார்பில் தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது அந்த பகுதியில் உள்ள அடி குழாய் ஒன்றையும் சேர்த்து தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. தண்ணீர் குடம் வைக்க முடியாத அளவிற்கு தார்சாலை மூடியதால் தண்ணீர் பிடிக்க முடியாமல் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகினர்.
நல்ல நிலையில் செயல்பட்டு வரும் அடி குழாயை மூடி தார்சாலை அமைத்துள்ளதால் தண்ணீர் பிடிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. தார்சாலை அமைக்கும்போது பழைய சாலையை தோண்டி எடுத்துவிட்டு புதியசாலை அமைக்காமல், அதன்மீதே சாலை அமைத்துள்ளதாகவும், தார்சாலை அமைக்கும்போது, நல்ல நிலையில் செயல்பட்டுவரும் அடிகுழாயை மூடி தார்சாலையை  ஒப்பந்ததாரர் அமைத்துள்ளார்.
ஏற்கனவே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மோட்டார் பைக், அடிகுழாய் ஆகியவற்றை சேர்த்து தார்சாலை அமைக்கப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில் தற்போது பழனியிலும் இதுபோன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. கோடைகாலம் ஆரம்பித்துள்ள நிலையில் நல்ல முறையில் செயல்படும் அடிகுழாயை மீண்டும் சீரமைத்து தண்ணீர் பிடிக்கும் வகையில், நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *