கவர்னர் மாளிகையில் நடைபெறும் குடியரசு தின வரவேற்பு விழாவுக்காக அச்சடிக்கப்பட்டுள்ள அழைப்பிதழில் தமிழ்நாடு-தமிழ் ஆண்டு அச்சடிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு என்பதை தமிழகம் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த மாதம் ஒரு நிகழ்ச்சியில் பேசி இருந்தார். கிண்டி கவர்னர் மாளிகையில் நடைபெற்ற பொங்கல் பெருவிழாவின்போது அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழில் தமிழக ஆளுநர் என்றும் மத்திய அரசு பயன்படுத்தும் அசோக சின்னமும் இடம் பெற்றிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதன் பிறகு கவர்னர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு-தமிழகம் என்பதற்கான விரிவான விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டார். இதன் வெளிப்பாடாக இப்போது தமிழ்நாடு என்ற வார்த்தையை உச்சரித்து வருகிறார். கிண்டி கவர்னர் மாளிகையில் வருகிற 26-ந்தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெறும் குடியரசு தின வரவேற்பு விழாவுக்காக அச்சடிக்கப்பட்டுள்ள அழைப்பிதழில் தமிழ்நாடு ஆளுநர் என்றும் திருவள்ளுவர் ஆண்டு தைத்திங்கள் என்றும் தமிழக அரசு இலட்சினையும் (முத்திரை) அழகாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குடியரசு தின அழைப்பிதழில் தமிழ்நாடு-தமிழ் ஆண்டு
