• Fri. Apr 26th, 2024

தமிழக காவல்துறையும் போலீஸ் சங்க போராட்டமும்

நீலம் புரொடக்ஷன் வழங்க பா.இரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரக்கனி நடிப்பில் பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் பா. ரஞ்சித் தயாரிப்பில் ரைட்டர் படம் வெளியானது.

இதில் போலீஸ் சங்கம் வைக்க வழக்கு நடத்தும் தலைமை காவலராக சமுத்திரக்கனி நடித்திருக்கிறார். அந்த போலீஸ் போராட்டம் குறித்த தகவலை தெரிந்து கொள்வோமா?
இந்தியாவிலேயே தமிழகப் போலீசார் இரண்டு முறை போராட்டம் நடத்தி வெற்றிபெறவில்லை

ஒன்று, 01.01.1953– ல் ‘ஓய்வு நாளைக்கு சம்பளம் கேட்டு’ போராட்டம். இரண்டு, 17.10.1979– ல் ‘போலீஸ் சங்கம் கேட்டு’ போராடி அரசால் ஒடுக்கப்பட்ட போராட்டம்.

இந்த இரண்டு போராட்டங்கள் குறித்து காவல் துறையில் முன்பு தலைமை காவலராக பணியாற்றி போராட்டத்தில் பங்குகொண்ட சுடலைமுத்து பாண்டியன் அவர்கள் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

1856-ஆம் ஆண்டு மதராஸ் மாநில போலீஸ் துவக்கப்பட்டது. 1859-ஆம் ஆண்டு மதராஸ் மாநில போலீஸ் சட்டம் இயற்றப்பட்டது. இந்த போலீஸ் பிரிட்டனின் ஸ்காட்லாந்து யாட் போலீசை பின் பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.இந்த போலீசார் சுதேசி மக்களுக்கு எதிராக தயாரிக்கப்பட்டனர். ஆளும் வர்க்கமான வெள்ளையரின் பாதுகாப்பை மையமாக கொண்டும் உருவாக்கப்பட்டது. வேலூர் கோட்டையில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

ஆங்கிலம் தெரியாத நம் இளைஞர்களை காவத்து மைதானத்திற்கு அழைத்து சென்று இடது காலில் ஓலையையும், வலது காலில் சேலையையும் கட்டி ஆங்கிலத்தில் லெப்ட் ரைட் என்ற ஆணைகேற்ப ஓலைக்கால், சேலைக்கால் போட்டு பயிற்சி கொடுத்தனர்.இருபது வயது இளைஞர்களை பயிற்சி என்கிற பெயரில் அடித்து நொறுக்கி அவமானப்படுத்தி மூளைச் சலவை செய்து வெள்ளையாருக்கு விசுவாசமாக இருக்கவேண்டும் என்கிற ஒரே குறிக்கோளை மட்டுமே கொண்டு உருவாக்கினர்.நாட்டைப் பற்றியோ, நாட்டு மக்களைப் பற்றியோ, மனிதாபிமானம் பற்றியோ சொல்லித் தரப்படவில்லை. இந்த காவலர்கள் மொத்தத்தில் அடிமை விசுவாசியாகவே வலம் வந்தனர்.


இந்த காவல் துறை பல பரிமாணங்களை பெற்று இன்று தற்போது உள்ள நிலையை எட்டியுள்ளது. வெள்ளையன் தேசத்தை விட்டு வெளியேறிய பிறகும் கூட உயர் அதிகாரிகளை எஜமான் என்றும், துரை என்றும் பல ஆண்டுகள் அழைத்து வந்தனர்.போலீசாரின் பல கடுமையான போராட்டங்களால் இந்த நடைமுறை வழக்கு தானாகவே மாறிவிட்டது.துவக்க காலம் முதலே போலீசாரை கேவலமாக நடத்துவதையே உயரதிகாரிகள் வழக்கமாக கொண்டிந்தனர். அடக்குமுறைகளை எதிர்த்து போராடுவது என்பது மனித இயல்பு. அப்படி அடக்குமுறைகளை எதிர் கொண்டு வாழ்ந்த போலீசாருக்கு, விடிவு வேண்டும் என்று கிளர்ந்து எழுந்ததுதான் போலீஸ் போராட்டம்.
1953 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி தமிழகத்தில் போலீசார் போராட முன்வந்தனர். போலீசார் போராட்டம் என்பது கொடி பிடிக்கவில்லை. கோஷம் போடவில்லை. வேலை செய்ய மாட்டோம் என்று அறிவிக்கவில்லை.


போராட்டம் என்பது ‘சம்பளம் வாங்க மறுத்த’ செயலாகும்.
வாரத்தில் ஏழு நாட்களும் வேலை செய்ய வேண்டும் என்கிற கடுமையான உத்தரவுடன் எப்போது அழைத்தாலும் பணிக்கு வர வேண்டும் என்கிற கெடுபிடியான நிலை இருக்க, தங்களுக்கு வாரத்திற்கு ஒரு நாள் ஓய்வு வேண்டும். அப்படி கொடுக்க முடியாத பட்சத்தில் அதற்கான ஒரு நாள் சம்பளம் வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைத்தனர்.


அதை பொறுக்க முடியாத அன்றைய அரசு, மறுநாள் காலை பனியன் மற்றும் கால் சட்டையுடன் எல்லோரும் மைதானத்திற்கு வரவேண்டும். துப்பாக்கி வேண்டாம்லத்தி வேண்டாம் என்கிற உத்தரவை பிறப்பித்தது.


மறுநாள் குறிப்பிட்ட நேரத்தில் அனைவரும் மைதானத்தில் கூடினார்கள். மலபார் சிறப்பு போலீஸ் அவர்களை சுற்றி வளைத்தது. இப்போது சம்பளம் வாங்குகிறாயா? இல்லையா?என்று உயர் அதிகாரிகள் மிரட்டி கேட்க, தங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றினால் மட்டுமே நாங்கள் சம்பளம் வாங்குவோம் என்று உறுதியாக கூறினார்கள்.உடனே மலபார் போலீசார் அவர்கள் அனைவரையும் அடித்து நொறுக்கியது.

எல்லோரையும் கைது செய்து சிறைக்கு அனுப்பினார்கள்.அரசு குடியிருப்பில் வசித்த போலீசாரின் குடும்பங்களை அங்கிருந்து வெளியேற்றி வீதிக்கு விரட்டினார்கள்.போலீஸ் சங்க தலைவரான எத்திராஜ், செயலாளர் சின்னையா ஆகியோரை கைது செய்து சித்திரவதை செய்தனர். கொடிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்தனர். அந்த போலீஸ் போராட்டம் அப்போது ஒடுக்கப்பட்டது.முதல்வர் ராஜாஜி, அந்த போலீஸ்கார்கள் மீது பரிவு கொண்டு சிலருக்கு தீயணைப்பு துறையில் வேலை கொடுத்தார்.

போலீஸ் சங்க கோரிக்கையான ஆறு நாள் வேலை, ஏழாம் நாள் வேலை என்றால் அதற்கு அதிகப்படியாக ஒரு நாள் ஊதியம் ‘ஒரு ரூபாய் கொடுக்க’ ஆணை பிறப்பித்தார்.அந்த போராட்டத்தால் பலர் வேலை இழந்தனர். அந்த போராட்டத்தை முன்னின்று நடத்திய அப்பு நாயர், மாயாண்டித்தேவர், நாயுடு போன்ற சிலர் புதுபேட்டையில் வியாபாரம் செய்தனர்.அன்றைய போலீஸ் போராட்டத்தை கொடிய முறையில் ஒடுக்கியவர் பிற்காலத்தில் காவல் தெய்வமாக கருதப்பட்ட ஐ.ஜி. F.V. அருள் A.P. ஆவார்.


அதன் பிறகு 1979 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக போலீஸ் போராட்டம் நடந்தது.

ஓய்வே இல்லாத பணி,

உயர் போலீஸ் அதிகாரிகளின் அடக்குமுறை

பொது இடங்களில் போலீசாரை கேவலாமாக நடத்துவது

ஆர்டலி முறை

போலீஸ் சுய சிந்தனைக்கு தடை

உழைப்புக்கு ஏற்ற ஊதியம்‌ இல்லாதத் தன்மை

ஆகியவையே போலீசாரை போராட தூண்டியது. காரணமின்றி எந்த காரியமும் நடந்துவிடாது.

போலீசாரும் உழைக்கும் வர்க்கமும் என்கிற எண்ணத்தை மேலோங்க களத்தில் குதித்தனர்.

1979 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் ஒரு நிகழ்வு நடந்தது.

தன் கட்சிக்காரருக்காக காவல் நிலையத்திற்கு வந்த வழக்கறிஞர் ஒருவர், அங்கு பணியில் இருந்த இராமச்சந்திரன் என்கிற துணை ஆய்வாளரிடம் நியாயத்திற்கு புறம்பாக நடந்து கொண்டார்.

வாய் தாகராறு முற்றவே, துணை ஆய்வாளரும், வழக்கறிஞரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு, கட்டி உருண்டு புரண்டனர். பத்திரிகைகள் பிரளயம் ஏற்பட்டது போல செய்திகள் வெளியிட்டன.

மறுநாள் வழக்கறிஞர்கள் நீதி மன்றங்களை புறக்கணித்து வீதிக்கு வந்தனர். காவல்துறையைப் பற்றி கேவலாமாக விமர்சனம் செய்தனர். அப்போது இருந்த முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றியும் மோசமாக விமர்சனம் செய்தனர்.

வழக்கறிஞர் சங்கத்தினர் சிலர் முதல்வர் எம்.ஜி.ஆரை சந்தித்து, திருப்பரங்குன்றம் துணை ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக அவரை பணி இடை நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

ஆனால், முதல்வர் எம்.ஜி.ஆர். மறுத்துவிட்டார். போலீஸ் இரவு பகலாக மக்களுக்காக கஷ்டப்பட்டு பணியாற்றுகிறார்கள். அவர்களை எந்த வகையில் நான் நடவடிக்கை எடுக்க முடியும் என்று கேட்டார்.

வழக்கறிஞர்கள் விட்டபாடில்லை. முதல்வர் எம்.ஜி.ஆரை ஆத்திரப்பட வைத்தனர்.

நீங்கள் வழக்கறிஞர் சங்கம் வைத்திருக்கிறீர்கள். போராடுகிறீர்கள். போலீஸாருக்கும் சங்கம் இருந்தால் அவர்களும் இங்கு வந்து உங்களைப் போல வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுங்கள் என்று பேசுவார்கள். அவர்களின் தரப்பு கோரிக்கையை முன் வைப்பார்கள்.

அவர்களுக்கு சங்க உரிமை இல்லை என்பதற்காக அவர்கள் நலனை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று ஆணித்தரமாக அறிவித்துவிட்டார்.

மீண்டும் வழக்கறிஞர்கள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களை சீண்டிப்பார்க்க, எம்.ஜி.ஆர். அவர்கள், நான் போலீசாருக்கு சங்கம் வைக்க அனுமதி வழங்கப் போகிறேன். அவர்கள் நாளையே சங்கம் வைத்துக் கொள்ளலாம் என்று அறிவித்தார்.

இது போலீசாருக்கு அதிர்ச்சியோடு, ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஒவ்வொரு போலீசாரும் தங்கள் கை விலங்கு உடைந்துவிட்டதாக கருதினார்கள். இனி, உயர் அதிகாரிகளால் பழிவாங்கப்பட்ட மாட்டோம் என நம்பினார்கள்.


மறுபக்கத்தில் உயர் போலீஸ் அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள். ஒரு பெரிய தவறை முதல்வர் எம்.ஜி.ஆர். செய்துவிட்டதாக புலம்பினார்கள்.இனி, காவலர்கள் தறிகெட்டு போய்விடுவார்கள். obey the order என்கிற சொல் இனி பயனற்று போய்விடும் என்று பதறினார்கள். இனி தமிழக போலீஸ் விபரீதத்தை நோக்கி பயணிக்கும் என்று கூறினார்கள்.உதவி ஆய்வாளர் முதல், காவல்துறை தலைவர் வரை போலீசாருக்கு சங்கம் வைக்க அனுமதி வழங்குவதை ஏற்கவில்லை.


சோ ராமசாமி போன்ற பத்திரிகையாளர்கள் எம்.ஜி.ஆர். விபரீத விளையாட்டில் ஈடுபட்டுள்ளதாக பேசி, எழுதினார்கள். நேரடியாகவும், அப்படிக் கூடாது என்று முறையிட்டார்கள்.அதே வேளையில் இடது சாரி சிந்தனையாளர்கள் எம்.ஜி.ஆரின் அறிவிப்பை வரவேற்றார்கள். போலீசார் சங்கம் அமைக்கும் செயலை பாராட்டினார்கள். போலீசாரும் ‘உழைக்கும் வர்க்கம் தான்’ என்று வாதிட்டனர்.வாழ் நாள் முழுவதும் போலீசாரால் பாதிக்கப்பட்டு – பழிவாங்கப்பட்ட கம்யூனிஸ்ட் தோழர்கள் போலீசாருக்கு ஆதரவாக செயல்பட்டனர்.

பேசினர். எழுதினர். சங்கம் அமைக்க ஆலோசனை வழங்கினார்.போலீசாருக்கு வழங்கப்பட்ட ‘சங்கம்’ போலீசாரின் உரிமைகளை காப்பதற்காக என்பதை பல போலீசாரால் புரிந்துகொள்ள முடியவில்லை.ஏதோ ஒரு தொழிற்சங்க உரிமை கிடைத்ததை போல போலீசாருக்கு வழங்கப்பட்டதாக கருதினார்கள்.

விளைவு?

பல காவல் நிலைய அதிகாரிகளுக்கும், போலீஸாருக்கும் கசப்புணர்வு தலை தூக்கியது.கட்டுப்பாடன தமிழக காவல்துறையில் பெரிய தொய்வு ஏற்பட்டதோ என்கிற உணர்வு பல அதிகாரிகளால் உணர முடிந்தது.
குற்றவாளிகளையும் – அரசியல்வாதிகளையும் உளவுப்பார்த்துக் கொண்டிருந்த உளவுத்துறை, மடைமாற்றி தனது சொந்த சகோதரர்களை பற்றி தினம் தினம் செய்தி சேகரித்து அனுப்ப வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.


இதனால், உடுப்பு அணிந்து பணி செய்த போலீஸாருக்கும், உடுப்பு அணியாமல் உளவு பார்த்து வந்த போலீஸாருக்கும் இடையே பெரிய பிளவு ஏற்பட்டது.போலீசார் உளவுத்துறையினரை கேவலமாக பேசத் தொடங்கினர். நம்மை இவர்கள் காட்டிக் கொடுக்கதான் வருகிறார்கள் என உளவுத்துறையினரை சந்தேகித்தினர்.இதனால், தமிழகத்தில் அனைத்து போலீசாரும் கண்காணிக்கப்பட்டனர். முதல்வர் எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான ஊடகவியாளளர்களும், காவல்துறை அதிகாரிகளும் எம்.ஜி.ஆர். அவர்களிடம் போலீஸ் பற்றி தவறான தகவல்களை கொடுத்து வந்தனர்.


இந்த காலகட்டத்தில் போலீசார் மற்றும் தலைமைக் காவலர் வரை ஒரு சங்கமும், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் சேர்ந்து ஒரு சங்கமும் வைத்துக் கொள்ளலாம் என அரசு ஆணை பிறப்பித்தது.அந்த சங்கத்தை அரசே அமைத்து தரும் என்றும், அந்த அரசாணையில்குறிப்பிடப்பட்டிருந்தது.


இந்த நிலையில் திருநெல்வேலியை சேர்ந்த நயினார் தாஸ் என்கிற சப் – இன்ஸ்பெக்டரும், A.C.J. பிரிட்டோ என்கிற சப் – இன்ஸ்பெக்டரும், இணைந்து அரசின் ஆணைக்கு எதிராக காவலர் முதல் ஆய்வாளர் வரை ஒரு சங்கத்தை அமைத்துக் கொண்டனர்.நயினார் தாஸ் தலைவராகவும், A.C.J.பிரிட்டோ பொதுச் செயலாளராகவும், லோபஸ் பொருளாளராகவும் அறிவிக்கப்பட்டனர். பிற நிர்வாகிகளையும் தேர்ந்தெடுத்திருந்தனர். இந்த செய்தி போலீசார் மத்தியில் மிகப்பெரிய எழுச்சியை உருவாக்கியது.


இந்த போலீஸ் போராட்டம் எப்படி தீவிரமானது. பிறகு எப்படி ஒடுக்கப்பட்டது என பல தகவல்களை தனது போலீஸ் போராட்டம் என்கிற நூலில் தெரிவித்திருக்கிறார், சுடலைமுத்து பாண்டியன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *