• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

தமிழக சுகாதாரத்துறை ஐசியுவில் உள்ளது-மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர்

ByA.Tamilselvan

Dec 26, 2022

திமுக ஆட்சியில் சுகாதாரத்துறை ஐசியுவில் உள்ளது. உடனடியாக அந்த துறையை குணப்படுத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளது” என்று, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “அமெரிக்கா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் உருமாறிய கொரோனா பி.எப்.7 அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தியாவின் குஜராத்தில் கண்டறியப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன. ஒடிசாவிலும் அதன் தாக்கம் உள்ளது.
தமிழகத்திற்கும் அச்சமான சூழல் உள்ளது. புத்தாண்டு கொண்டாட்ட காலக்கட்டங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உருமாறிய கொரோனாவை கண்டறிய தமிழகத்தில் ஆய்வக வசதி தயார் நிலையில் இருக்க வேண்டும். ஏற்கனவே போடப்பட்ட தடுப்பூசியும், பூஸ்டர் தடுப்பூசியும் இதனை எதிர்கொள்ள எதிர்ப்பு சக்தியோடு இருக்கிறதா? என்பது மக்களிடம் கேள்வியாக உள்ளது. இதுகுறித்து அரசு உடனடியாக விளக்க வேண்டும். புதியவகை கொரோனாவை எதிர்கொள்ள தமிழக அரசு தேவையான நடவடிக்கை எடுத்துள்ளதா?. தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி அளவீடு ஓராண்டு தான் என சொன்னார்கள். தடுப்பூசி மற்றும் பூஸ்டர் செலுத்தி ஓராண்டு ஆகி விட்டது. அதனால் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறதா? என்பது முதல் கேள்வி. வரக்கூடிய உருமாறிய கொரோனா பி.எப்.7-ஐ எதிர்கொள்வது எப்படி? என்பது குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் பதில் அளிக்க வேண்டும்.
சீனாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், விமான நிலையங்களில் பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும். தமிழகத்தில் ஜூன் மாதத்தில் பாதிப்பு இருக்கும் என வல்லுனர்கள் கூறுகின்றனர். எனவே, மக்களுக்கு எதையும் மறைக்காமல் அரசு வெளிப்படை தன்மையுடன் செயல்பட வேண்டும். இந்தியாவில் தமிழக சுகாதாரத்துறை முதல் இடத்தில் இருந்த நிலையில், திமுக ஆட்சியில் சுகாதாரத்துறை ஐசியுவில் உள்ளது. உடனடியாக அந்த துறையை குணப்படுத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளது” என்று கூறினார்.