ஈரான் நாட்டில் சிக்கித் தவித்த தமிழக மீனவர்கள் 15 பேர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முயற்சியால், பத்திரமாக மீட்கப்பட்டு, கப்பல், விமானம் மூலம், நேற்று இரவு, சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.
தமிழ்நாடு பாஜக, இந்த மீனவர்களை மீட்டுக் கொண்டு வருவதற்கான முழு செலவையும் ஏற்றுக்கொண்டு உள்ளதாக, நயினார் நாகேந்திரன் அறிவிப்பு
அடுத்த ஓரிரு நாட்களில், மேலும் 15 தமிழக மீனவர்கள், மீட்கப்பட்டு அழைத்து வரப்பட உள்ளனர்.

ஈரானில் நாங்கள் அச்சம் பீதியில் இருந்தோம். அவ்வப்போது குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. இரவில் எங்கள் தலைக்கு மேல் குண்டு பறந்து செல்லும் போது ஏற்படும் ஒளி எங்களை மிகுந்த அச்சத்துக்கு உள்ளாக்கியது.
நாங்கள் பிப்ரவரி மாதம் ஈரானுக்கு சென்றோம். அப்போதிலிருந்தே, அங்கு போர் நடந்து கொண்டு இருந்ததால், எங்களால் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல முடியவில்லை. இதனால் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் தவித்துக் கொண்டு இருந்தோம்.
ஈரான் நாட்டில் சிக்கித் தவித்த தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம் உவரியை சேர்ந்த 15 மீனவர்கள், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூலம் மீட்கப்பட்டு, ஈரானில் இருந்து கப்பலில் துபாய் வந்து, துபாயிலிருந்து விமானம் மூலம் டெல்லி வந்த, மீனவர்கள் 15 பேர், நேற்று இரவு டெல்லியில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் மூலம் சென்னை வந்தனர்.
சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மீனவர்களை வரவேற்று, பாஜக ஏற்பாடு செய்த வாகனங்கள் மூலம், திருநெல்வேலி மாவட்டம் உவரிக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது சென்னை விமான நிலையத்தில் மீனவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி;

நாங்கள் மீன்பிடித் தொழிலுக்காக, கடந்த பிப்ரவரி மாதம் ஈரானுக்கு சென்றோம். ஆனால் நாங்கள் சென்ற பின்பு, அங்கு போர் நடந்து கொண்டு இருந்ததால், எங்களால் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல முடியவில்லை. இதனால் நாங்கள் மீன்பிடி தொழில் இல்லாமல் சும்மா தான் இருந்தோம். சாப்பாட்டிற்கு மிகவும் கஷ்டப்பட்டோம்.
இந்த நிலையில் ஜூன் மாதம் போர் மேலும் அதிகரித்த பின்பு, அங்கு ஒரு அச்சமான சூழ்நிலை ஏற்பட்டது. எங்களுக்கு நேரடியாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் நாங்கள் தங்கியிருந்த இடம் அருகில் குண்டுகள் வெடிப்பது, எங்கள் தலைக்கு மேலாக குண்டுகள் பறந்து செல்வது, இரவில் அந்த வெளிச்சத்தை பார்த்து எங்களுக்கு மிகுந்த அச்சம் ஏற்பட்டது. மேலும் ஈரான் நாடு முழுவதும் ஜிபிஎஸ் கருவி வேலை செய்யவில்லை.
ஜிபிஎஸ் கருவி இல்லாமல், எங்களால் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல முடியாது. இதனால் நாங்கள் இந்தியாவுக்கு திரும்பி வந்து விட வேண்டும் என்று முடிவு செய்தோம். இதை அடுத்து திருநெல்வேலியில் உள்ள எங்கள் குடும்பத்தினர், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மூலம் முயற்சிகள் மேற்கொண்டனர். அதன் பின்பு இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் மூலம், நாங்கள் 15 பேர், மீட்கப்பட்டு, விமானம் இல்லாததால், ஈரானிலிருந்து கப்பலில் துபாய் வந்தோம். அங்கு சில நாட்கள் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன் பின்பு துபாயிலிருந்து விமானத்தில், டெல்லிக்கும் டெல்லியில் இருந்து இப்போது சென்னைக்கும் வந்திருக்கிறோம். எங்களை பத்திரமாக மீட்டுக்கு கொண்டு வந்த, பிரதமர் மோடி, தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோருக்கு நன்றி.
நாங்கள் 15 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு வந்துவிட்டோம். ஆனால் ஈரானில் நாங்கள் இருந்த தீவுக்கு அருகில் மற்றொரு தீவில், மேலும் 15 பேர், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இருக்கின்றனர். அவர்களையும் பத்திரமாக மீட்டு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மீனவர்கள் கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் மீனவர்களை வரவேற்ற தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது;
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் முயற்சியால், இந்த மீனவர்கள் ஈரானில் தங்கியிருந்த தீவுக்கு, இந்திய தூதரக அதிகாரிகள் நேரடியாக சென்று, இவர்களை மீட்டு, துபாய்க்கு கப்பலில் அனுப்பி வைத்தனர். துபாயில் இருந்து விமானம் மூலம் டெல்லி வழியாக இப்போது சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மேலும் பதினைந்து திருநெல்வேலி மாவட்டம் மீனவர்கள் ஈரானில், மற்றொரு தீவில் இருக்கின்றனர். அவர்களையும் மீட்டு அழைத்து வருவதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. அடுத்த ஓரிரு தினங்களில் அவர்களும், இந்தியா திரும்புவார்கள்.
இவர்களை ஈரானிலிருந்து மீட்டு கொண்டு வந்து, சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் போய் சேர்வதற்கான, அனைத்து செலவுகளையும் தமிழ்நாடு பாஜக ஏற்றுக்கொண்டுள்ளது. இவர்களுக்கு ஈரானில் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் அதே நேரத்தில், அங்கு போர் நடந்து கொண்டு இருப்பதால், இவர்களுக்கு மீன்பிடி தொழில் இல்லாமல், கஷ்டப்பட்டனர். எனவேதான் சொந்த ஊருக்கு அழைத்துக் கொண்டு வரப்பட்டுள்ளனர். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.