மத்திய நீர்வள ஆணைய தலைவர் முகேஷ் குமார் சின்ஹா தலைமையிலான குழுவினர் இன்று பெரியாறு அணையில் ஆய்வு செய்தனர். இந்த திடீர் ஆய்வுக்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

முல்லைப்பெரியாறு அணை பிரச்சனைக்கு மத்திய நீர்வளத்துறை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அனில்ஜெயின் தலைமையில் ஏழுபேர் கொண்ட புதிய மேற்பார்வை குழுவை நியமித்தது. இந்த குழுவில் தமிழகம் சார்பாக, தமிழ்நாடு கூடுதல் தலைமை செயலாளர் மங்கத் ராம் சர்மா, தொழில்நுட்ப நிபுனர் ஆர்.சுப்ரமணியன், கேரள அரசு சார்பாக கேரள அரசின் கூடுதல் தலைமை செயலர் டிங்கு பிஸ்வால், கேரள நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் ஆர்.பிரியேஷ், தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய ஆராய்ச்சியாளர் விவேக் திரிபாதி, அறிவியல் ஆராய்ச்சி மைய ஆராய்ச்சியாளர் ஆனந்த் ராமசாமி உள்ளனர்.
இக்குழுவினர் கடந்த மார்ச் 22-இல் பெரியாறு அணையில் அணையின் மெயின் அணை, பேபிடேம், எர்த்டேம் மற்றும் பேபிடேமை பலப்படுத்த தடையாக உள்ள மரங்கள் ஆகியவற்றை பார்வையிட்டனர். பின்னர் பெரியாறு அணையின் மேற்பகுதியில் வைக்கப்பட்டுள்ள சீமோஸ்கிராப் நிலநடுக்க, நில அதிர்வு கருவிகளின் இயக்கங்களையும், அணையின் கசிவுநீர் அளவையும், வள்ளைக்கடவு வனப்பாதையையும் ஆய்வு செய்து திரும்பினர். பெரியார் அணையில் எந்த வழக்கப் பணிகளையும் செய்ய கேரளா வனத்துறை அனுமதிக்காத போது, இக்குழுவினர் அணையை ஆய்வு செய்ததற்கு பெரியார் வைகை பாசன விவசாய சங்கத்தினர் அப்பொழுது கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இன்று மத்திய நீர்வள ஆணைய தலைவர் முகேஷ் குமார் சின்ஹா தலைமையில் மத்திய நிர்வாக ஆணைய முதன்மை பொறியாளர் சதீஷ்குமார் உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட குழுவினர் பெரியாறு அணையில் ஆய்வு செய்தனர்.
இந்த திடீர் ஆய்வு குறித்து தமிழக அதிகாரிகள் கூறுகையில், மத்திய நிர்வாக ஆணையத் தலைவர் ஒரு வார காலம் கேரளாவில் உள்ள அணைகளை பார்வையிட வந்துள்ளார், அப்பொழுது அவரது பணியில் பெரியாறு அணையும், பேபி அனையையும், அணை மதகுகளையும், கேலரி பகுதியும் பார்வையிட்டு சென்றார். மற்றபடி வேறு ஒன்றும் இல்லை என்றனர்.
இந்த ஆய்வில் மதுரை முதன்மை பொறியாளர் ரமேஷ், பெரியாறு அணை சிறப்புக்கோட்ட கண்காணிப்பு பொறியாளர் சாம் இர்வின், உதவிசெயற்பொறியாளர் குமார், உதவி பொறியாளர்கள் ராஜகோபால், நவீன்குமார், ஆகாஷ் உடபட பலர் கலந்துகொண்டனர்.
மத்திய நிர்வாக ஆணையத் தலைவர் திடீரென பெரியாறு அணையில் ஆய்வு செய்ததற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பெரியாறு வைகை பாசன விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் பென்னிகுக் பாலசிங்கம் கூறுகையில், மத்திய நீர்வள ஆணையத்தின் கட்டுப்பாட்டிலிருந்து கடந்த ஆண்டு ஜூன் மாதமே, முல்லைப் பெரியாறு அணை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் சென்று விட்டது. இந்த நிலையில் கடந்த மாதம் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் அணில் ஜெயின் அவர்கள் தலைமையில், ஏழு பேர் கொண்ட பிரதான கமிட்டி, முல்லைப் பெரியாறு அணையினை ஆய்வு செய்தது.

கேரள கும்பல்களின் ஆதிக்கமும், கெரோ நடவடிக்கைகளையும் சுத்தமாகக் கண்டு கொள்ளாத அணில் ஜெயின் அந்த ஆய்வை கேலிக்கூத்தாக்கினார். இந்த நிலையில் கடந்த மாதமே ஆய்வறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டிய நெருக்கடி இருந்தும் அது குறித்து எவ்வித செயல்பாடுகளையும் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் மேற்கொள்ளாத நிலையில், இன்று திடீரென எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் முல்லைப் பெரியாறு அணைக்குள் ஆய்வு செய்வதற்காக தேசிய நீர்வள ஆணையத்தின் தலைவர் முகேஷ் குமார் சின்கா தலைமையில் அதிகாரிகள் குழு செல்வது எந்த வகையில் நியாயம்.
அனில் ஜெயின் தலைமையில் நடந்த ஆய்வறிக்கையின் முடிவு எங்கே…? நீர்வள ஆணையத்தின் இந்த நடவடிக்கை கண்டனத்திற்குரியது, எதேச்சதிகாரமானது,
ஏற்றுக்கொள்ள முடியாதது. என்ன நோக்கத்திற்காக முகேஷ் குமார் அணைக்குள் வந்தார் என்பதை அவர் தெரிவிக்காவிட்டால், நீர்வள ஆணையத்தை கண்டித்து கம்பம் நகரில் இருந்து ஊர்வலமாக குமுளியை நோக்கி செல்ல வேண்டிய நெருக்கடி ஏற்படும், என்றார்.