• Mon. Apr 29th, 2024

விரைவில் தமிழக அமைச்சரவை மாற்றம்..!

Byவிஷா

Dec 20, 2023

திமுக அமைச்சரவையில் ஒரு அமைச்சர் சிறையில், தண்டனையை எதிர்கொண்டிருக்கும் மற்றொரு அமைச்சர் என்று இருக்கும் நிலையில், விரைவில் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற திமுக ஆட்சியில் பொன்முடி உயர்கல்வித்துறை அமைச்சராகவும், கனிமளவத்துறை அமைச்சராகவும் இருந்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில் அமைச்சர் பொன்முடி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என கூறி அவரை விடுதலை செய்தது நீதிமன்றம். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதில், பொன்முடியின் வருமானம், வருமானவரி மற்றும் சொத்து விவரங்கள் ஆகியவற்றை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை 39 சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணை ஆதாரங்களையும் சமர்பித்தது. பொன்முடி தரப்பில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கவில்லை என்றும், பொன்முடியின் மனைவிக்கு 110 ஏக்கர் நிலம் தனியாக இருப்பதாகவும், இதில் மேற்கொள்ளப்படும் வர்த்தகத்தை புலன் விசாரணை அதிகாரி கணக்கில் கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக 64.90 விழுக்காடு சொத்து சேர்த்தது நிரூபணமாகிவிட்டதாக தீர்ப்பளித்தார்.

இதனால் திமுக அமைச்சரவையில் பொன்முடி தகுதியிழப்பை எதிர்கொள்ள இருக்கிறார். மக்கள் பிரதிநித்துவ சட்டப்படி, நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவுடன் மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்கள் அந்த நிமிடத்தில் இருந்து தகுதியிழப்பை எதிர்கொள்வார்கள். அதன்படி டிசம்பர் 21 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தண்டனை விவரங்களை அறிவித்தவுடன் பொன்முடி எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதியிழப்பை எதிர்கொள்ள நேரிடும். ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருக்கிறார். அவர் இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர்ந்து கொண்டிருகிறார். இந்த சூழலில் மற்றொரு அமைச்சரும் தண்டனையை எதிர்கொண்டிருப்பது நிர்வாக ரீதியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் விரைவில் தமிழக அமைச்சரவையில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *