• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

விமர்சனங்களுக்கு பதிலளிக்க த.வெ.க தலைவர் விஜய் அனுமதி

Byவிஷா

Nov 4, 2024

அரசியல் ரீதியாக வரும் விமர்சனங்களுக்குக் கண்ணியத்துடன் பதிலடி கொடுங்கள் என த.வெ.க தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் அனுமதி அளித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் செயற்குழு கூட்டம் நேற்று சென்னையில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் பனையூர் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், நடிகரும், த.வெ.க தலைவருமான நடிகர் விஜய்,
விமர்சனங்களுக்கு கண்ணியதுடன் பதில் தெரிவியுங்கள் என கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு அனுமதி கொடுத்துள்ளார். மேலும் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது கூறப்படுகிறது.
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றப் பொய் வாக்குறுதிகளை அளித்து தமிழக மக்களை திமுக அரசு ஏமாற்றி வருவதாக தவெக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாநில தன்னாட்சி உரிமை, நீட் தேர்வுக்கு எதிர்ப்பு, மாதந்தோறும் மின் கணக்கீடு முறை, மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு, மதுக்கடை மூடல், மின்சாரம், பால் கட்டண உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி சமூக நீதியை நிலை நாட்ட எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சமூக நீதி பாதையில் பயணிக்கிறோம் என்று திமுக அரசு கூறி வருகிறது. மத்திய அரசின் மீது பழிபோட்டு தப்பித்துக்கொள்ள நினைக்கிறது.
பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும். பரந்தூரில் உள்ள 13 நீர்நிலைகளை அழிப்பது சென்னையை நிரந்தர வெள்ளக்காடாக்கும்.
மின் கட்டண உயர்வு, பால் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு என பொதுமக்கள் மீது மேலும் மேலும் வரிச் சுமையை மட்டும் அதிகமாக விதிக்கிறது திமுக அரசு.

கள்ளச் சாராய விற்பனை, போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரிப்பு போன்ற நிர்வாகச் சீர்கேடுகளைச் சரிசெய்யாததால் அமைதி பூங்காவாக இருந்த தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையே காட்டுகிறது.
மகளிர் உரிமைத் தொகை, பரிசு தொகை என்று ஒரு புறம் அறிவித்துவிட்டு மறுபுறம் மதுக்கடைகள் மூலம் வருவாய் பெருக்கி வருவது ஏற்புடையதல்ல, மதுக்கடைகளை கால நிர்ணயம் செய்து மூட வேண்டும்.
தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ‘தகைசால் தமிழர் விருது’ வழங்கும் தமிழ்நாடு அரசை வரவேற்றும் தவெக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மின்கட்டண உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பால் விலை உயர்வு, பேருந்து கட்டணம் உயர்வு ஆகியவற்றை கண்டித்து திமுக அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மத்திய அரசுக்கு எதிராகவும் நீட் விலக்கு மற்றும் ஆளுநருக்கு எதிரான நிலைப்பாடு உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
மாநிலத் தன்னாட்சி உரிமைக் கொள்கைப்படி மருத்துவம் போலவே கல்வியும் மாநில பட்டியலுக்கு மாற்றப்பட அழுத்தம் கொடுக்கப்படும்.
ஒரேநாடு, ஒரே தேர்தல் மூலம் ஜனநாயகத்தை அச்சுறுத்த நினைக்கும் பாஜ அரசுக்கு கண்டனம்.
மாநில அரசுகளின் சுயமரியாதையைச் சீண்டும் ஆளுநர் பதவியை அகற்ற வலியுறுத்தப்படும் உள்ளிட்ட 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனையடுத்து சீமானின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தவெக நிர்வாகி சம்பத்குமார் வெளியிட்ட அறிக்கையில், கடந்த வெள்ளிக்கிழமை நடந்த தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டத்தில் சீமான் முன்வைத்த விமர்சனங்களால் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள், அவரையும் இனி மற்ற அரசியல்வாதிகளில் ஒருவராக கருதி விலகி செல்வார்கள். இதுமட்டுமல்லாது, தமிழக வெற்றிக் கழக மாநாடு நடப்பதற்கு முன்பு சீமான் பேசிய பேச்சுகளுக்கும் மாநாட்டின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அவர் பேசிய பேச்சுகளுக்கும் இடையே பெரிய வேறுபாடு தெரிகிறது.
நமக்குப் பல வேலைகள் உள்ள நிலையில், சீமானைப் போன்று பேசுபவர்கள் ஒவ்வொருவருக்கும் பதில் சொல்லிக் கொண்டு இருந்தால் எங்கள் பயணத்தின் வேகம் தடைபடும். எனவே, எங்கள் அரசியல் எதிரி யார் என்பதை முடிவுசெய்து விட்டு களமாடிக் கொண்டு இருக்கிறோம். யாரை விமர்சனம் செய்ய வேண்டும், யாரை கடந்து போக வேண்டும் என்பதை தலைவர் விஜய் தங்களுக்கு உணர்த்தியுள்ளார். சீமான் தன் கருத்தை அவரது இதயத்தில் இருந்து பேசவில்லை என்பதால் அதை எங்களது மூளைக்குள் கொண்டுபோக விரும்பவில்லை.
மேலும், அவரவர் கருத்து அவரவர் உரிமை; முடிவை தமிழ்நாட்டின் மக்களின் கரங்களில் கொடுத்துவிட்டு தங்கள் பணியை கவனிப்பதே அனைவருக்கும் நல்லது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், இந்த கூட்டத்தில், மாநாடு குறித்து நேர்மறை, எதிர்மறை கருத்துகளை உயர்மட்ட தலைவர்களிடம் விஜய் கேட்டறிந்தார்.
அதேபோல், தவெக மீது விமர்சனம் வைப்பவர்களுக்கு கண்ணியத்துடன் பதிலடி கொடுக்க வேண்டும், தனி நபர் விமர்சனங்களை தவிர்த்து விட்டு ஆதாரங்களுடன் சமூகவலைதளங்களில் பதிவிட வேண்டும், பூத் கமிட்டியில் அதிக பெண்களை இடம்பெற செய்யவேண்டும் என கூட்டத்தின் வாயிலாக விஜய் அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. மேலும் இந்த செயற்குழு கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அவை பின்வருமாறு:
சமூக நீதி, மதச்சார்பின்மை கோட்பாடுகள் செயல்படுத்தப்படும். சமதர்ம சமத்துவக் கோட்பாட்டிற்கு சமூக நீதிக்கு எதிரான வர்ணாஸ்ரம கோட்பாடுகள் எவ்வகையில் இருந்தாலும் அவற்றுக்கு முழு எதிர்ப்பு தெரிவிக்கப்படும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

கொள்கைகளையும் கொள்கைத் தலைவர்களையும் உறுதியாகப் பின்பற்றுவதில்தான் ஓர் இயக்கத்தின் வளர்ச்சியும் வேகமும் விவேகமும் இருக்கிறது. தமிழக வெற்றிக் கழகம் அதை நன்கு உணர்ந்து, தன் கொள்கைத் தலைவர்களின் வழி நடக்கும் இயக்கம் ஆகும்.
பெண்கல்வி, பெண்கள் முன்னேற்றம், சமூகச் சீர்திருத்தம், சமூக நீதி, பகுத்தறிவுச் சிந்தனை போன்ற பெரியாரின் சமூகச் சீர்திருத்தச் சிந்தனைகளை நம் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக எப்போதும் முன்னெடுக்கும்.

மக்கள் மனங்களில் நாம் முன்வைக்கின்ற கொள்கைகள் தங்களுக்கான பாதுகாப்பைத்தான் பேசுகின்றன என்ற நம்பிக்கையை ஆழமாக ஏற்படுத்த வேண்டும் என்பதையும் உணர்ந்ததால்தான் தமிழக வெற்றிக் கழகம் தன்னுடைய கொள்கைகளுக்கு “மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கைகள்” என்று பெயர் சூட்டியுள்ளது என்பதை விளக்க வேண்டியது நம் கடமை ஆகும்.
தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து மக்களுக்குமான ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் நல்லிணக்கத்தையும் பாதுகாப்பையும் எப்போதும் போற்றிப் பாதுகாக்கும் என்பதையும் இந்தச் செயற்குழு வாயிலாக மீண்டும் தெளிவுபடுத்துகிறது.
ஒரே நாடு; ஒரே தேர்தல் என்ற அறிவிப்பும், அதைச் சட்டமாக்குதலும் ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கைகள். மக்களாட்சித் தத்துவத்திற்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் அச்சுறுத்தலாக உள்ள ஒன்றிய பாஜக அரசின் இந்தச் சட்டத்தை, இச்செயற்குழு கண்டிக்கிறது.
ஜனநாயக நாட்டில் உண்மையான மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்தி, ஆளும் ஆட்சியாளர்களின் மக்கள் விரோதச் செயல்பாடுகளை எதிர்த்து மக்கள் பக்கம் நின்று. உண்மையான. நேர்மையான கருத்துகளைத் தெரிவிப்பதும் மக்களுக்காகப் போராடுவதும் எதிர்க் கட்சிகளின் கடமை மட்டுமல்ல. உரிமையும் ஆகும். அத்தகைய உரிமையை, அரசின் பழிவாங்கும் நடவடிக்கை வாயிலாகத் தடுக்க முயல்வதும், ஊடகங்களைச் சுதந்திரமாகச் செயல்பட விடாமல் தடுப்பதும், சமூக ஊடகங்கள் வாயிலாக எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது தனிமனிதத் தாக்குதல்கள் சார்ந்து அவதூறுப் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விடுவதும் மக்கள் விரோத சக்திகள் பயன்படுத்தும் அணுகுமுறை. இத்தகைய அரசியல் அணுகுமுறையை, தமிழகத்தைத் தற்போது ஆளும் திமுக ஆட்சியாளர்கள் உட்பட யார் செயல்படுத்தினாலும் இச்செயற்குழு கடுமையாக எதிர்க்கிறது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்குத் தண்டனை வழங்கும் தற்போதைய சட்டத்தை வலுவாக்கி, இது போன்ற வழக்குகளில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கச் சட்டத் திருத்தம் கொண்டுவர, ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்குப் பாரபட்சமின்றி, கடும் தண்டனைகளை நீதிமன்றங்கள் வாயிலாக உடனடியாகப் பெற்றுத் தரும் நடவடிக்கைகளைத் தீர்க்கமாகத் தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
சாதிவாரியாகக் கணக்கெடுப்பு நடத்தி, சமூக நீதியை நிலைநாட்ட எந்த நடவடிக்கையும் எடுக்காமல், சமூக நீதியின் பாதையில் பயணிக்கிறோம் என்று திமுக அரசு கூறி வருவதை மக்கள் நம்ப மாட்டார்கள். ஒன்றிய அரசின் மீது பழிபோட்டுவிட்டுத் தப்பித்துக்கொள்ள நினைக்கும் முயற்சி பலிக்காது. உண்மையான சமூக நீதியை நிலை நாட்டிட, தமிழக அரசு முதலில் உடனடியாகச் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு அச்சாரமிடும் ஆய்வைக் காலதாமதமின்றி உடனே நடத்த வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
கல்வி, தொழில், மருத்துவம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட தேவைகளுக்காகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் தொழில் நகரமான கோவைக்கு வந்து குடியேறுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனைக் குறைக்கச் சென்னையைப் போன்று. கோவையின் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில், ஏற்கெனவே திட்டமிடப்பட்ட மெட்ரோ ரயில் சேவைக்கான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்று ஒன்றிய மற்றும் மாநில அரசுகளை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
இயற்கைத் தாயின் செல்லப் பிள்ளையான கன்னியாகுமரிப் பகுதியில் அணுக் கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் சுரங்கத் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசு முயல்கிறது. தென் தமிழகத்தைப் பாழ்படுத்தும் இன்னொரு முயற்சியே இது. எங்கள் மண்ணையும் மக்களையும் பாழ்படுத்தும் இதுபோன்ற அபாயம் விளைவிக்கும் நாசகர நச்சுத் திட்டங்களை உடனடியாகக் கைவிடவேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
நீட் தேர்வால் தமிழ்நாட்டில் இருக்கும் மாணவ மாணவிகள். குறிப்பாக, கிராமப்புறங்களில் இருக்கும் ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பினைச் சேர்ந்த மாணவ – மாணவிகள் அனைவருமே மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். நீட் தேர்வு விலக்குப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண, கல்வியைப் பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும். ஒருவேளை அதில் சிக்கல் இருக்கிறது என்றால், ஓர் இடைக்காலத் தீர்வாக, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தைத் திருத்தி. ஒரு சிறப்புப் பொதுப் பட்டியல் என்பதை உருவாக்கி அதில் கல்வியைச் சேர்க்க வேண்டும். மாநில அரசுகளுக்கு முழுச் சுதந்திரம் தரப்பட வேண்டும். அப்போது தமிழ்நாட்டில் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய முடியும். எனவே கல்வியைப் பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர, ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

இவ்வாறு 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.