• Fri. Apr 26th, 2024

12 மணி நேர வேலை மசோதா நிறுத்திவைப்பு

ByA.Tamilselvan

Apr 25, 2023

தினமும் 12 மணி நேர வேலை மசோதா மீதான செயலாக்கம் நிறுத்து வைக்கப்படுவதாக தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மசோதா குறித்து, சென்னை தலைமை செயலகத்தில், தொழிற்சங்கத்தினருடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, சி.வி.கணேசன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்நிலையில், மசோதா மீதான செயலாக்கம் நிறுத்து வைக்கப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
இது குறித்து தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், ‘கடந்த 21-4-2023 அன்று,12 மணி நேர வேலையைத் தொழிலாளர் தேர்வு செய்ய வழிவகுக்கும் சட்ட மசோதாவை தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் கொண்டு வந்தது. தமிழ்நாட்டில் பெரும் முதலீடுகளை ஈர்த்திடவும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினைப் பெருக்கிடவும், குறிப்பாக தென் மற்றும் வட மாவட்டங்களில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திடும் நோக்கிலும் தமிழ்நாடு அரசால் நிறைவேற்றப்பட்டது.
தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கக்கூடிய பல்வேறு அம்சங்கள் இச்சட்டத்தில் இருந்தாலும், சில தொழிற்சங்கங்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், தலைமைச் செயலகத்தில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தொழிற்சங்கப் பிரதிநிதிகள், இச்சட்டமுன்வடிவினை நடைமுறைப்படுத்தினால் தொழிலாளர்களுக்கு ஏற்படக்கூடிய சிக்கல்கள், சிரமங்கள் குறித்து விவரமாக எடுத்துரைத்து, தங்களுடைய கருத்துக்களை அரசு பரிசீலிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டனர்.
அந்த வகையில், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவின் மீது பல்வேறு தொழிற்சங்கப் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், 12 மணி நேர வேலை சட்டமுன்வடிவின் மீதான மேல்நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுகிறது’ எனக் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *