நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் முக்கூர்த்தி தேசிய பூங்காவின் வனப் பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர் ரா.கிருபாசங்கர் உத்தரவின்படி, முக்கூர்த்தி தேசிய பூங்காவில் ஒருங்கிணைந்த நீலகிரி வரையாடுகள் கணக்கெடுப்புப் பணி இன்று (ஏப்.24) தொடங்கி வரும் 27-ம் தேதி வரை 4 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

முக்கூர்த்தி வனச்சரக வனப்பணியளர்கள், நீலகிரி வரையாடு திட்ட மூத்த ஆராய்ச்சியாளர்கள், வண்டலூர் வன ஆய்வக ஆராய்ச்சியாளர்கள், உலகளாவிய நிதி அமைப்பின் தன்னார்வ நிறுவன குழுவினர் உள்ளடக்கிய குழு சுமார் 30 நபர்கள் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
இவர்கள், முக்கூர்த்தி தேசிய பூங்காவில் இரட்டைப் பார்வையாளர்கள் முறையில் தேர்வு செய்துள்ள 6 பிளாக்குகளில் மொத்தம் 12 குழுக்களாகச் சென்று, மலை முகடுகள், புல்வெளி மலைகள் மற்றும் நீர்நிலைகள் ஆகிய வரையாடு வாழ்விடங்களை நேரடியாக பார்வையிட்டு, தகவல்கள் சேகரித்து நீலகிரி வரையாடுகள் கணக்கெடுப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்.
தமிழ்நாட்டின் மாநில விலங்காக உள்ள வரையாடுகள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்குறுத்தி தேசிய பூங்கா, கோவை மாவட்டம் வால்பாறை போன்ற பகுதிகளில் மட்டுமே வாழ்வது குறிப்பிடத்தக்கது.