மாஞ்சோலை தொழிலாளர்கள் விவகாரத்தில், தமிழ்நாடு அரசு தற்போது செயல்படுத்தும் மறுவாழ்வு திட்டம் தொடர்பான விவரங்களை கூடுதல் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய மனுதாரர்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாஞ்சோலை விவகாரத்தில் விரிவான மறுவாழ்வுத் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி மாஞ்சோலையைச் சேர்ந்த ஜான் கென்னடி, அமுதா, சந்திரா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தனர்.
அதில் மாஞ்சோலை தேயிலை தோட்டப் பகுதியில் 700 குடும்பங்கள் வசிக்கின்றன. மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்துக்கான குத்தகை காலம் 2028-ம் ஆண்டு பிப்ரவரி 11-ம் தேதி முடிவடைகிறது. ஆனால் குத்தகை காலம் முடிவடைவதற்கு முன்பாகவே தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் எஸ்டேட் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதனால், தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தையும், வீட்டையும் இழந்து வீதியில் வரும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ஏனெனில், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு சொந்தமாக இடமோ, வீடோ கிடையாது, சுமார் நான்கு தலைமுறைகளாக மாஞ்சோலை எஸ்டேட்டிலேயே வசிக்கின்றனர். மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கான மறுவாழ்வு உதவிகளை தமிழ்நாடு அரசு செய்ய வேண்டும்
மாஞ்சோலை எஸ்டேட்டில் வசிக்கும் 700 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கி, அதில் கலைஞர் கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்டவும், குடும்பத்தில் ஒருவருக்கு அங்கன்வாடிகளில் பணி வழங்கவும், குழந்தைகளுக்கு உயர்கல்வி வரை இலவசக் கல்வி வழங்கவும், மாற்றுப்பணி வழங்கும் வரை ஒரு குடும்பத்துக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளனர்.
அந்த மேல்முறையீடு மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சஞ்சய் பரேக், “மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும், கலைஞர் கனவு இல்ல திட்டம் உள்ளிட்டவை செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஆனால் உத்தரவாதம் அளித்தபடி எதையும் அரசு செய்யவில்லை. குறிப்பாக மறுவாழ்வு திட்டம் தொடர்பாக எந்த விவரமும் இல்லை எனக் கூறினார்.
இதையடுத்து மனுவை பரிசீலித்த நீதிபதிகள், “மாஞ்சோலை எஸ்டேட் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தற்போது செயல்படுத்தி வரும் மறுவாழ்வு திட்டம் தொடர்பாக கூடுதல் பிரமாண்ட பத்திரத்தை தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டனர்.
மேலும், அந்த மனுவின் நகல் தமிழ்நாடு அரசுக்கு 2 வாரங்களுக்குள் கொடுக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார், வழக்கு மீதான விசாரணை பிப்ரவரி 17-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.