மசோதா விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது. குறிப்பாக சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலதாமதம் செய்து வருகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமனம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து துணைவேந்தர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளை நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த விசாரணையின்போது, ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சில அறிவுறுத்தல்களை கூறியிருந்தது. இதற்கிடையே நேற்று மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது தமிழக பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதுதொடர்பான மசோதாக் களுக்கு 3 ஆண்டுகளாக பதில் அளிக்காதது ஏன் என்று தமிழக ஆளுநருக்கு, உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் விசாரணை இன்றும் (வெள்ளிக்கிழமை) தொடரும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
அதன்படி, இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆளுநர் எதுவும் விளக்கமளிக்காமல் மசோதாவை திரும்ப அனுப்பினால், அவர் மனதில் என்ன இருக்கிறது என்பது எப்படி தெரியும்?. சம்பந்தப்பட்ட மசோதாவில் என்ன மாற்றம் செய்ய வேண்டும் என்பதை அவர் தெரிவிக்கவில்லை என்றால் அரசுக்கு எப்படி தெரியும்?. சம்பந்தப்பட்ட மசோதா மீது தான் ஒப்புதல் கொடுக்க முடியாது என்பதை எப்படி ஆளுநர் உணர்ந்தார்?. இந்த கேள்விகளுக்கு விளக்கம் அளியுங்கள் என ஆளுநர் தரப்புக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
அதற்கு ஆளுநர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், துணைவேந்தர் நியமனத்தில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த நடைமுறை மத்திய சட்ட விதிமுறைகளுக்கு எதிராக உள்ளது. அவற்றுக்கு ஆளுநர்ர் எவ்வாறு ஒப்புதல் அளிப்பார் என்று கேள்வி எழுப்பினார். அப்போது நீதிபதிகள், பல்கலை. மசோதா மத்திய சட்டத்துக்கு எதிராக இருந்தால் அடுத்த நடவடிக்கை என்ன? மாநில அரசு எப்படி செயல்படும் என்று நினைக்கிறீர்கள்?. ஆளுநர் அரசுக்கு முட்டுக்கட்டையாக உள்ளார். மசோதா விவகாரத்தில் ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்க முடியாது என கூறினர்.
அதற்கு ஆளுநர் தரப்பு வாதிடுகையில், பல்கலை. செயல்பாடு குறித்து ஆளுநர் தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற இருந்தது. அதில் கலந்து கொள்ள வேண்டாம் என்று சில துணைவேந்தர்களை அரசு அணுகியது. யுஜிசி விதிகளின் கீழ் கட்டுப்பட்டு உள்ள துணைவேந்தர்கள் பொறுப்பை ஆக்கிரமிக்க மாநில அரசு முயற்சித்தது. அரசியல் காரணங்களுக்காகவே துணைவேந்தர் மசோதாவை மாநில அரசால் கொண்டு வந்தது.
ஆளுநர் சில முரணான காரணங்களுக்காக ஒப்புதல் வழங்காமல் இருப்பார் என்றால், அரசு மற்றும் ஆளுநர் என இரு தரப்பும் இணைந்து முடிவெடுக்க குடியரசு தலைவருக்கு அனுப்பலாம். குறிப்பாக, இதன் மீது முடிவெடுக்க குடியரசு தலைவருக்கு அனுப்புங்கள் என்று மாநில அரசே ஆளுநரை கேட்க வைக்கலாம். எனவே, இதில் எதுவும் மாநில உரிமையைப் பறிப்பதாக கருத முடியாது. ஆளுநர் அரசியலமைப்பு பிரிவு 200-ல் விதி 1-ன் கீழ் முடிவெடுத்தே ஆகவேண்டும் என்று கூறுவது, பிரிவு 200-ஐ முரணாக திரித்து கூறுவதாக ஆகும் என்று வாதிடப்பட்டது.
அப்போது குறுக்கீட்ட நீதிபதிகள், கடந்த 2023-ம் ஆண்டு மசோதாக்கள் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்ட பின்னர், தற்போது வரை என்ன நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டுள்ளார்?. 2 ஆண்டுகளாக மசோதாக்கள் அவரிடம் உள்ளதா? மாநில அரசுக்கும் அவருக்கும் இடையே தகவல் பரிமாற்றம் இருந்ததா என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு, அட்டர்னி ஜெனரல் கூறுகையில், இல்லை, மசோதாக்கள் அனுப்பப்பட்ட 2 மாதங்களில் தனது முடிவை தெரிவித்து விட்டார். அதில் 7 மசோதாக்கள் மீதான ஒப்புதலை நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளார் என்று தெரிவித்தார். அப்படியென்றால் குடியரசு தலைவரும் ஒப்புதலை நிறுத்தி வைக்கிறாரா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அத்துடன், குடியரசு தலைவர், மசோதா மீது முடிவெடுக்காமல் நிறுத்தி வைத்தால் அடுத்து என்ன? முடிவெடுக்காத நிலையில் அது அப்படியே கிடப்பில் உள்ளதா என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். அதற்கு, ஒப்புதல் இல்லாமல் குடியரசு தலைவரிடம் உள்ளதென்றால், அவர் அதற்கு மேல் எவரிடமும் கேட்க வேண்டியது இல்லை என ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்படியெனில் அந்த மசோதா கிடப்பிலேயே இருக்குமா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அரசியல் சாசன பிரிவு 200, 201 குறித்த அட்டர்னி ஜெனரல் விளக்கத்தை ஏற்க நீதிமன்றம் மறுப்பு. அரசியல் சாசன பிரிவு 200ன் முதல் விதியை புரிந்து கொள்ளாமல் நிராகரித்தால், வழக்கில் விசாரிப்பதற்கே ஒன்றும் இல்லை. இதோடு அனைத்தும் முடிந்தது என்றே அர்த்தம். எனவே உரிய விளக்கத்தை தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெளிவுபடுத்த வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள் ஆளுநர் தொடர்பான வழக்கை 10-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.