• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பகலில் வெயில், மாலையில் மழைக்கு வாய்ப்பு

Byவிஷா

Oct 17, 2024

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பகலில் வெயில் சுட்டெரிக்கும் எனவும், மாலையில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப்ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு பருவமழை முடிந்ததை தொடர்ந்து, நேற்று முன்தினம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. மேலும் வங்கக்கடல் பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியினாலும் கடந்த 7ஆம் தேதி இரவுமுதல் சென்னையில் கனமழை வெளுத்து வாங்கியது. தொடர்ந்து நேற்று முன்தினம் பகல் முழுவதும் கனமழை பெய்து வந்தது. இதனையடுத்து நேற்று டெல்டா மாவட்டங்களிலும், இன்று ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூரில் அதிக கனமழை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் சென்னைக்கு ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டிருந்தது. இதனால் நான்கு மாவட்ட பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் நேற்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்றைய தினம் மழை எதுவும் பெய்யவில்லை. இதனால் ரெட் அலர்ட்டும் திரும்ப பெறப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை முதல் நாளை காலை வரை வெப்ப சலனத்தை ஏற்படுத்தும் வகையில் மழை பெய்யக்கூடும் என தனியார் வானிலை கணிப்பாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது.

“நேற்று பிற்பகலில் இருந்து ஒரு சொட்டு மழைகூட பெய்யவில்லை. மேகக் கூட்டங்கள் இல்லாத தாழ்வுப் பகுதி நெல்லூர் பகுதியை அடைந்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடப்பதற்கான அறிகுறியே இல்லாமல் கடந்து கொண்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று பகலில் வெயில் உச்சத்தை தொடும். காற்றழுத்த தாழ்வு பகுதியானது, நிலப் பகுதிகளில் நகர்ந்து கொண்டிருப்பதால் தற்காலிகமாக காற்று வீச வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக இன்று மாலை முதல் நாளை காலை வரை வெப்ப சலனத்தை ஏற்படுத்தும் வகையில் மழை பெய்யக் கூடும். சென்னை, புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், காரைக்கால், நாகை மாவட்டங்களில் இன்றிரவு முதல் நாளை காலை வரை இடியுடன் கூடிய சாதாரண மழை பெய்யக் கூடும். சில இடங்களில் பெய்யாமலும் போகலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.