நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த மறைஞாயநல்லூரை சேர்ந்தவர் ஜானகி. இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவம் பார்க்க பக்கத்து வீட்டுக்காரரான செந்தில்குமார் என்பவரிடம் தனது வீட்டு பத்திரத்தை அடமானமாக வைத்து கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் சிறுக சிறுக என 5, லட்ச ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில் வாங்கிய கடனை கட்டமுடியாத காரணத்தால் ஜானகியின் வீட்டை செந்தில்குமார் எடுத்துக் கொண்டதாக தெரிகிறது. இதனிடையே தனது வீட்டை மீட்டு தர வேண்டுமென ஜானகி வேதாரண்யம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதற்கு போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், மன உளைச்சலுக்கு ஆளான ஜானகி, தனது கணவர் மாதவன் பிள்ளைகள் முகேஷ், முகிதா ஆகியோருடன் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தலையில் பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. இதையடுத்து அங்கிருந்த போலீசார் தலையில் ஊற்றிய பெட்ரோல் பாட்டிலை பிடுங்கி எறிந்து விட்டு தற்கொலைக்கு முயன்ற குடும்பத்தினரின் தலையில் தண்ணீரை ஊற்றி அவர்களை அங்கிருந்து அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
வாங்கிய ஐந்து லட்சம் ரூபாய் கடனுக்கு சிறுக சிறுக ஒரு லட்சம் இரண்டு லட்சம் என வழங்கினால் அதனை செந்தில்குமார் பெற்றுக் கொள்ள மறுப்பதாகவும், குடியிருக்கும் வீட்டை அபகரித்துக் கொண்ட அவர் மீது ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.