தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் உள்ள உணவகங்கள், டீ கடைகள், பேக்கரிகள், மளிகை கடைகள் ,சாலையோர கடைகளில் உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தடை செய்யப்பட்ட மற்றும் காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆண்டிபட்டி நகர் பகுதியில் உள்ள பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் தேனி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ராகவன் தலைமையில், ஆண்டிபட்டி உணவு பாதுகாப்பு அலுவலர் ஜனகர் சோதிநாதன், பெரியகுளம் உணவு பாதுகாப்பு அலுவலர் சக்தீஸ்வரன், உத்தமபாளையம் உணவு பாதுகாப்பு அலுவலர் மதன் குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்புறம் உள்ள கடைகள், ஆண்டிபட்டி கடைவீதி மற்றும் தேனி சாலையில் அமைந்துள்ள கடைகள், சாலையோர கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது காலாவதியான பொருட்கள், ரசாயனம் தடவப்பட்ட உணவு பொருட்கள், தடை செய்யப்பட்ட குட்கா, பிளாஸ்டிக் பொருள்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள், நாள் குறிப்பிடாத உணவுப் பொருட்களை பறிமுதல் செய்தும் ,கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கியும் அபராதம் விதித்து எச்சரித்து சென்றனர்.
இதன்மூலம் நேற்று தடைசெய்யப்பட்ட 30 உப்பு மூட்டைகள், தீபாவளியன்று தயார் செய்த இனிப்பு வகைகள் 10 கிலோ, தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் அரை கிலோ, ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்இந்த ஆய்வின்போது ஆண்டிபட்டி செயலாளர் சின்னசாமி ,சுகாதார ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.