

கோவையில் துடியலூர், இன்று மாலை கருமேகங்கள் சூழ்ந்து திடீரென கனமழை பெய்தது. குறிப்பாக, ஜி.என். மில், கவுண்டம்பாளையம், துடியலூர், நரசிம்ம நாயக்கன் பாளையம் பகுதி மற்றும் அதனை சுற்றி உள்ள சாலைகளில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. திடீர் மழையின் காரணமாக சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியது.
இதனால், அவ்வழியாக சென்ற வாகனங்கள் மிகவும் மெதுவாக ஊர்ந்து சென்றன. மாலை அலுவலகங்கள் முடிந்து வீடு திரும்பும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த மழையால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், மாலையில் பெய்த இந்த திடீர் மழை சற்று குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்தியது. இருப்பினும், சாலைகளில் தேங்கிய நீரால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். மாநகராட்சி ஊழியர்கள் மழை நீர் வடிகால்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
மேலும், அடுத்த சில மணி நேரங்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாகவும், கவனமாகவும் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

