ஞாயிற்றுக் கிழமை நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா , கர்நாடகா வழியாக நாளை புதுச்சேரி செல்ல திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில், அவரது பயணத்தில் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மாலை டெல்லியில் இருந்து எல்லை பாதுகாப்பு படை தனி விமானத்தில் புறப்பட்டு, இரவு 7.30 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வந்து சேருகிறார். அங்கிருந்து இரவு 7.35 மணிக்கு கார் மூலம் புறப்பட்டு, இரவு 8.15 மணிக்கு ஆவடியில் உள்ள சிஆர்பிஎப் முகாம் அலுவலகத்திற்கு செல்கிறார். அங்கு உள்ள விருந்தினர் மாளிகையில் இரவு தங்குகிறார்.
மறுநாள் 24 ஆம் தேதி ஞாயிறு காலை 8.30 மணிக்கு விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்டு 8.35க்கு ஆவடி விமானப் படைத்தளத்திற்கு வருகிறார். அங்கிருந்து தனி ஹெலிகாப்டரில் காலை 8.40 புதுச்சேரி மாநிலம் புறப்பட்டு செல்கிறார். காலை 9:30 மணிக்கு அவர் புதுச்சேரி மாநிலம் சென்றடைகிறார்.
புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவிட்டு பின்பு மாலை 5.30 மணிக்கு புதுச்சேரியிலிருந்து தனி ஹெலிகாப்டரில் புறப்பட்டு மாலை 6.15 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வந்து சேர்கிறார். பின்பு மாலை 6.20 மணிக்கு சென்னை பழைய விமான நிலையத்திலிருந்து எல்லை பாதுகாப்பு படை தனி விமானத்தில், டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வருகையையொட்டி டெல்லியில் இருந்து சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் சென்னை விமான நிலையம் வந்து சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிய ஆய்வுக் கூட்டத்தை நடத்தினா்.