தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் ஐந்தாவது வார்டு பகுதியில் உள்ள குப்பை கிடங்குகளில் கொட்டப்படுகிறது.இந்த குப்பைகளை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தீ வைத்து எரிக்கப்படுவதாலும் குப்பை கிடங்குகளில் தீ மளமளவென எரிந்து கடும் புகை மூட்டமாக வெளியேறி வருகிறது.

குறிப்பாக குப்பை கிடங்கு அமைந்துள்ள பகுதிக்கு அருகிலேயே ஆண்டிபட்டியில் இருந்து கொண்டமநாயக்கன்பட்டி செல்லக்கூடிய முக்கிய சாலையும், கொண்டமநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியும்,100க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் அமைந்துள்ளதால் குப்பைகளில் எரியும் தீயின் மூலம் ஏற்படும் புகை நேரடியாக பள்ளி வளாகத்திற்குள் செல்வதால் பள்ளி மாணவ மாணவிகளுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மூச்சுத்திணறல் சுவாச கோளாறு உள்ளிட்ட நோய்தொற்று ஏற்படுவதாகவும், இதனால் தினந்தோறும் பள்ளி மாணவ மாணவிகள் கடும் சிரமத்திற்கு ஆளாவதாகவும் குறிப்பாக பள்ளி மைதானத்தில் விளையாடும்போது மாணவ மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதாக குற்றம் சாட்டும் பள்ளி தலைமையாசிரியர் அருகில் உள்ள 100க்கும் மேற்பட்ட குடியிருப்பு வளாகங்களிலும் முழுமையாக புகைமண்டலம் சூழ்ந்து காணப்படுவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உள்ள குடியிருப்பு வாசிகளும் தினந்தோறும் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருவதாகவும் குற்றம் சாட்டுகின்றார்.
இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் சார்பிலும் குடியிருப்பு வாசிகள் சார்பிலும் கடந்த இரண்டு மாதங்களாக ஆண்டிப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் முதல் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக பதில் அளிப்பதாக கூறுகின்றனர்.எனவே மாணவர்கள் சுகாதாரமாக படிப்பதற்கு ஏற்பாடு செய்யும் வகையில் தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும்
உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக இந்தப் பகுதிகளில் கொட்டபடும் குப்பைகளை அகற்றி வேறு பகுதிகளில் கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.