மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி அரசு பள்ளி அருகில் ஆபத்தான நிலையில் மழை நீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடுவதால் பள்ளி கட்டிடம் சேதமடையும் நிலையிலும் பள்ளிக்குள் மழை நீர் புகுந்து மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் நிலையிலும் இருப்பதாகவும் ஆகையால் அரசு பள்ளி அருகில் மழை நீர் வடிகால் வசதி ஏற்படுத்தித் தர மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். கருப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்கள் கருப்பட்டி இரும்பாடி பாலகிருஷ்ணாபுரம் பொம்மன்பட்டி அம்மச்சியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இங்கு கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளி அருகில் செல்லும் கால்வாயில் மழைக்காலங்களில் மழை நீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதுடன் பாம்பு பல்லி போன்ற பூச்சிகள் பள்ளிகளுக்குள் சென்று ஆபத்தான சூழ்நிலையை மாணவர்களுக்கு உருவாக்குகிறது. இதனை கருத்தில் கொண்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக பள்ளி அருகே மழை நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது.

அருகிலேயே பள்ளி வகுப்பறை இருப்பதால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் நிலையில் அதிகாரிகள் பள்ளியை நேரில் ஆய்வு செய்து உரிய மழை நீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். மழை நீரால் சேதமடைந்துள்ள பள்ளி கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் பள்ளியை நேரில் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.