கடந்த வாரம் கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பாலியல் சீண்டலுக்கு ஆளாகி அங்கிருந்த நாய்களால் காப்பற்றப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட பெண் குறித்த தகவல் அறிந்த கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் அப்பெண்ணின் உறவினர்களை கண்டுபிடித்து அவர்களின் அனுமதியுடன் காரமடை பகுதியில் செயல்பட்டு வரும் மனநல காப்பகத்தில் பராமரிப்பு மற்றும் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். அங்கு இவரைப் போலவே மனநலம் பாதிக்கப்பட்ட அவரது தம்பி அக்காவை பிரிய மனமில்லாமல் அழுதபடியே பாசப்போராட்டம் நடத்தியது காண்போர் மனதை கனக்கவைத்தது.

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் என் ஜி ஜி ஓ காலனி பகுதியில் நள்ளிரவு 2 மணியளவில் 17 வயது மதிக்கத்தக்க போதை இளைஞர் தனியாக சாலையில் அமர்ந்திருந்த அதேபகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மானபங்கம் செய்ய முயன்றார்.

அப்போது அருகில் இருந்த நாய்கள் அவனை கடித்து விரட்டியடித்து அப்பெண்ணை காப்பாற்றியது. இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியான நிலையில் இச்சம்பவம் தொடர்பாக அருகில் உள்ள கணேஷ் நகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது மதிக்கத்தக்க சிறுவனை கைது செய்த துடியலூர் போலீசார் அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.

இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து அறிந்த கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் உடனடியாக அப்பெண்ணின் உறவினர்களை கண்டுபிடித்து அவர்களிடம் ஒப்படைக்கும் முயற்சி மேற்கொண்டார். ஆனால் ஏற்கனவே இப்பெண்ணை போலவே அவரது தம்பியும் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதால் பராமரிக்க முடியாமல் அவரது தாய் சிரமப்பட்டுக் கொண்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து தமிழக வெற்றிக் கழக பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியச் செயலாளர் நித்தின் உதவியும் காரமடையில் செயல்பட்டு வரும் அன்பு மலர் மனநல காப்பகத்தில் சேர்த்து பராமரிப்பு மற்றும் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர். அப்போது இவரைப் போலவே மனநலம் பாதிக்கப்பட்ட அவரது தம்பி அக்காவை பிரிய மனமில்லாமல் அழுதபடியே பாசப்போராட்டம் நடத்தியது காண்போர் மனதை கனக்கவைத்தது.









