காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த அம்மையப்பநல்லூர் கிராமத்தில் பழமை வாய்ந்த பிரசித்திபெற்ற கோவிலான ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் உள்ளது.
இந்த ஆலயத்தின் உட்பகுதியில் ஐயப்பனுக்கு என தனி சன்னதியும், நவக்கிரக சன்னதி மற்றும் சிவன், நந்தி, பார்வதி சிலைகளும் உள்ளது. இந்த கோவிலை கிராம மக்களே பராமரித்து வருகின்றனர். கோவிலின் பூசாரி காலை மற்றும் மாலை வேளைகளில் பூஜை செய்வதும், பொதுமக்கள் சுவாமியினை வழிபடுவதும் வழக்கம். இந்நிலையில் வழக்கம் போல் நேற்றிரவு கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்ற பூசாரி இன்று காலை வந்து கோவிலை திறந்தபோது உள்ளே ஐயப்பன் சிலை தலை, கை துண்டிக்கப்பட்ட நிலையிலும் நவக்கிரக சிலைகள் நான்கு சிலைகள் உடைக்கப்பட்டும் காணப்பட்டது. இதைக் கண்ட பூசாரி மற்றும் கிராம மக்கள் உத்திரமேரூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் உத்திரமேரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிலையினை உடைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.