தென் தமிழகத்தின் பெருமைமிகு அடையாளமாக இருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூரின் பென்னிங்டன் நூலகத்தின் 150-ம் ஆண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஏழாம் நிகழ்வாக, பாரதியார், வ.உ.சி.க்கு சிறப்பான விழா எடுக்கப்பட்டது.

பென்னிங்டன் கலையரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில், பென்னிங்டன் கமிட்டியின் உப-தலைவர் வி. முத்து பட்டர் தலைமை வகித்தார். “தேர்ப்புகழ்” செ.பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பேராசிரியர் முனைவர் எம்.ஜெயகுமரன் விழாவுக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து, பென்னிங்டன் நூலக வரலாற்றை வி. முத்து பட்டர் எடுத்துரைத்தார்.
“பாரதியின் தேச பக்தி” என்ற தலைப்பில் செ.பாலகிருஷ்ணனும், “சுதந்திரப் போராட்டத்தில் வ.உ.சி.யும் பாரதியும்” என்ற தலைப்பில் இராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியின் முன்னாள் முதல்வர் வே.வெங்கட்ராமனும் சிறப்புரையாற்றினர். சிறப்பு விருந்தினராக வந்திருந்த வ.உ.சி.யின் கொள்ளுப்பேத்தி சி. மரகதவல்லி பழனியப்பன் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. யினைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். வ.உ.சி. ஆய்வு வட்டத்தின் செயலாளர் குருசாமி மயில்வாகனன் வ.உ.சி. யைப்பற்றி தான் ஆய்வு செய்து அறிந்த குறிப்புகளைத் தெரிவித்தார்.
வ.உ.சி. மற்றும் பாரதியின் உருவப்படங்களை முறையே சி. மரகதவல்லி பழனியப்பனும், வே.வெங்கட்ராமனும் திறந்து வைத்து மலர் அஞ்சலி செலுத்தினார்கள். பிறகு, “மக்கள் தலைவர் வ.உ.சி.” என்ற புத்தகம் வந்திருந்த அனைவருக்கும் இலவசமாகத் தரப்பட்டது. விழாவின் முக்கிய விருந்தினர்களுக்கு சால்வை அணிவிக்கப்பட்டு, நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.

தொழிலதிபர் ஏ.எம்.எம்.ராதா சங்கர், வந்திருந்த அனைவருக்கும் நன்றி நவின்றார். விழாவில், மல்லி ஸ்ரீ சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரியின் மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். விழாவின் நிகழ்ச்சிகளை சொற்பொழிவாளர் “மனம் மகிழ” ராஜாராம் தொகுத்து வழங்கினார். விழாவுக்கான ஏற்பாடுகளை பென்னிங்டன் நூலக கமிட்டியின் செயல் நிர்வாகிகள், நூலகப் பணியாளர்கள் மற்றும் பென்னிங்டன் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.