விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல்லில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான, ஸ்ரீநின்ற நாராயணப் பெருமாள் கோவில் உள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், மிகப் பிரசித்தி பெற்றதுமான ஸ்ரீநின்ற நாராயணப் பெருமாள் கோவிலில் ‘ஆனி பிரம்மோற்சவம்’ திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

ஆனி பிரம்மோற்சவத் திருவிழா கடந்த 4ம் தேதி (வெள்ளி கிழமை) காலை, கருட கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ‘தேரோட்டம்’ இன்று நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீநின்ற நாராயணப் பெருமாள், ஸ்ரீசெங்கமலத் தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஸ்ரீநின்ற நாராயணப் பெருமாள் – ஸ்ரீசெங்கமலத் தாயார் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளினர்.

திருத்தேரில் எழுந்தருளிய சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதணை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தேரில் எழுந்தருளிய சுவாமிகளை வணங்கினர். இதனையடுத்து ஆனி பிரம்மோற்சவத் தேரோட்டம் உற்சாகமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து ‘கோவிந்தா’ ‘கோபாலா’ என்ற பக்தி பரவசத்துடன் கோஷமிட்டு தேரிழுத்தனர். தேரோட்ட நிகழ்ச்சியில் சிவகாசி, திருத்தங்கல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தேரோட்ட நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரிகள் மற்றும் நிகழ்ச்சி உபயதாரர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.