• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தபால் நிலையங்களில் ஒய்வூதியர்களுக்கு சிறப்பு முகாம்

Byவிஷா

Nov 4, 2024

மத்திய, மாநில அரசுகள் மற்றும் ராணுவ ஓய்வூதியர்கள் உள்ளிட்டோர் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வசதியாக அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் ஜி.நடராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,
மத்திய, மாநில அரசுகள், ராணுவம் உள்ளிட்டவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் தங்கள் ஓய்வூதியத்தைத் தொடர்ந்து பெற, ஆண்டுதோறும் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். இந்த நிலையில், நேரில் சென்று ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க ஓய்வூதியர்கள் படும் சிரமங்களை தவிர்க்கும் விதமாக, டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் (ஜீவன் பிரமாண்) திட்டத்தை மத்திய அரசு கடந்த 2014-ம் ஆண்டு அறிமுகம் செய்தது.
இந்தத் திட்டம் மூலம், அஞ்சல் துறையின்கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி, ஓய்வூதியர்கள் வீட்டில் இருந்தபடியே, கைவிரல் ரேகையை பயன்படுத்தி, தங்களது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது. ஓய்வூதியர்களின் வீட்டுக்கே சென்று தபால்காரர்கள் இந்த சேவையை வழங்குகின்றனர். இதற்கு சேவை கட்டணமாக தபால்காரரிடம் ரூ.70 செலுத்த வேண்டும்.
டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் சேவையை பெற விரும்பும் ஓய்வூதியர்கள் அருகே உள்ள அஞ்சலகம் அல்லது தங்கள் பகுதி தபால்காரரை தொடர்பு கொள்ளலாம். https://ccc.cept.gov.in/ServiceRequest/request.aspx என்ற இணையதளம் அல்லது ‘Postinfo’ செயலி மூலமாகவும் கோரிக்கையை பதிவு செய்யலாம். இந்த சேவையை வழங்க அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் நவம்பர் 1-ம் தேதி முதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.