• Fri. Apr 26th, 2024

சபாநாயகர் அப்பாவு திடீர் தர்ணா போராட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பரபரப்பு

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஒப்புக்கொண்ட படி மீண்டும் வேலை வழங்காததால் சபாநாயகர் அப்பாவு அங்கு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் பகுதியில் அணுமின் நிலையம் அமைந்துள்ளது.
ரஷ்யாவின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள அணு மின் நிலையத்தில் தற்போது 2 அணு உலைகளில் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
இந்த அணு மின் நிலையத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர். கூடங்குளம் அணு மின் நிலையத்தினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்று எதிர்ப்புகள் ஒருபக்கம் இருந்தாலும் இங்கு மேலும் 4 அணு உலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், 136 தனியார் நிறுவனங்கள் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
இதில் பணியாற்றுவதற்காக சி மற்றும் டி பிரிவு ஊழியர்களில் உள்ளூரை சேர்ந்தவர்களுக்கும் அணு மின் நிலையத்திற்காக நிலம் வழங்கியவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. அப்பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் அணு மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.
அணு மின் நிலையத்தில் பணிகளை மேற்கொண்டு வரும் ஒரு தனியார் ஒப்பந்த நிறுவனம் ஊழியர்களுக்கு வழங்கும் ஊதியத்தில் முறைகேடு செய்வதாக அங்கு பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் 25 பேர் குற்றம் சாட்டி இருந்தனர். இந்த முறைகேட்டிற்கு அணு மின் நிலைய அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக குறிப்பிட்ட அந்த தனியார் ஒப்பந்த நிறுவனம் மீது கூடங்குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதனால், புகார் கூறிய 25 தொழிலாளர்களையும் ஒப்பந்த நிறுவனம் பணியில் இருந்து நீக்கியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து தங்களுக்கு மீண்டும் பணி வழங்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தொழிலாளர்கள் அறிவித்தனர். இதையடுத்து ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் வைத்து சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் மீண்டும் பணி வழங்க சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் ஒப்புக்கொண்டது. ஆனால், கூறியபடி பணி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த தகவலை அறிந்த சபாநாயகர் அப்பாவு பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுடன் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு சென்றார். அணு மின் வளாக இயக்குநருடன் சபாநாயகர் அப்பாவு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் ஆவேசம் அடைந்த அப்பாவு அங்கு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, சபாநாயகர் அப்பாவுவிடம் பேசி, பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு பணி வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து சபாநாயகர் அப்பாவு போராட்டத்தை கைவிட்டு தொழிலாளர்களுடன் அங்கு இருந்து சென்றார். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பேசிய சபாநாயகர் அப்பாவு, பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் வேலை வழங்கவில்லை என்றால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *