• Tue. May 30th, 2023

சொப்பன சுந்தரி’ – சினிமா விமர்சனம்

Byதன பாலன்

Apr 14, 2023

வெளிநாடுகளில் பல இந்திய திரைப்படங்களை விநியோகம் செய்து வரும் முன்னணி நிறுவனமான ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனம், ஹியூ பாக்ஸ் ஸ்டுடியோஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து தமிழில் தயாரித்திருக்கும் முதல் திரைப்படம் ‘சொப்பன சுந்தரி’.

இந்தப் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், தென்றல், நடிகர்கள் கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சுனில் ரெட்டி, அகஸ்டின், பிஜான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
பாலமுருகன் மற்றும் விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு பின்னனி இசையை விஷால் சந்திரசேகர் அமைக்க, பாடல்களுக்கு அஜ்மல் இசையமைத்திருக்கிறார்.
டார்க் காமெடி ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ‘லாக்கப்’ படத்தை இயக்கிய இயக்குநரான எஸ்.ஜி.சார்லஸ் இயக்கியிருக்கிறார்.

‘சொப்பன சுந்தரி’ என்ற பெயரை தமிழகத்து மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். 1989-ல் வெளிவந்து ரிக்கார்டு பிரேக் அடித்த ‘கரகாட்டக்காரன்’ படத்தில் கவுண்டமணி உதிர்த்த காமெடி டயலாக்கில் இதுவும் ஒன்று.

டப்பாவாகிப் போன பழைய பிளைமவுத் காரை தள்ளிக் கொண்டு வரும் கவுண்டமணி “இந்தக் காரை முதன்முதல்லா கான்பூர் மகாராஜா வைச்சிருந்தார். அப்புறம் திருவனந்தபுரம் திவான் வைச்சிருந்தார். அடுத்து ஹைதராபாத் நிஜாம் வைச்சிருந்தாரு. அப்புறம் ஒரு மந்திரி வைச்சிருந்தாரு. ஒரு எம்.எல்.ஏ. வைச்சிருந்தாரு.. கடைசியா சினிமா கவர்ச்சி நடிகை ‘சொப்பன சுந்தரி’ வைச்சிருந்தாங்க..” என்று சொல்லுவார்.

ஒரு காருடன் சம்பந்தப்பட்ட ‘சொப்பன சுந்தரி’ என்ற அந்தப் பெயரையே ஒரு காருக்கு மூன்று பேர் சொந்தம் கொண்டாடும் கதையம்சத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்திற்கு வைத்திருப்பது நிச்சயமாக சாலப் பொருத்தம்தான்.

நாயகி ‘அகல்யா’ என்ற ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு நகைக் கடையில் வேலை செய்து வருகிறார். படுத்த படுக்கையாக இருக்கும் அப்பா, அம்மா, வாய் பேச முடியாத அக்கா என்ற குடும்பத்துடன் சொற்ப வருமானத்தில் வாழ்ந்து வருபவர். இவரது அண்ணன் கருணாகரன் இவர்களுக்கு முன்பாகவே திருமணம் செய்து கொண்டு தனிக்குடித்தனம் போய்விட்டார்.

ஐஸ்வர்யா வேலை செய்யும் நகைக்கடைக்கு வந்து நகை வாங்கும் கருணாகரன் அங்கே கொடுக்கப்பட்ட பரிசு கூப்பனை மட்டும் ஐஸ்வர்யாவின் முகத்தில் வீசிவிட்டுப் போகிறார். ஆனால் அந்தக் கூப்பனுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் ஒன்று பரிசாக கிடைக்கிறது.

இந்தக் காரை முன் வைத்து ஐஸ்வர்யாவின் அக்கா, லட்சுமி பிரியாவை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை கல்யாணத்துக்கு ஒகே சொல்கிறான். லட்சுமி பிரியாவுடன் தனியாகப் பேச வேண்டும் என்று சொல்லி மாப்பிள்ளைக்காரன் அந்தக் காரை எடுத்துக் கொண்டு வெளியில் செல்கிறான்.
அப்படி அந்தப் புத்தம் புதிய காரில் போகும்போது லட்சுமி பிரியாவுக்கு டிரைவிங் சொல்லித் தருகிறான் மாப்பிள்ளை. அப்போது அந்தக் காரில் ஒருவன் அடிபட்டு விழுந்து சாகிறான். பின்னால் போலீஸ் வருவதைப் பார்த்த மாப்பிள்ளை, காரில் அடிபட்டவனை காரின் டிக்கியில் ஏற்றி காரை கொண்டு வந்து லட்சுமி பிரியாவின் வீட்டில் நிறுத்திவிட்டு “நாளைக்கு வந்து காரில் இருக்கும் சடலத்தை டிஸ்போஸ் செய்வதாகச்” சொல்லிவிட்டுப் போகிறான்.

மறுநாள் காலையில் ஐஸ்வர்யாவின் வீட்டுக்குத் தன் மனைவி, மச்சான் மைம் கோபியுடன் வரும் கருணாகரன், “இந்தக் கார் நான் வாங்கிய நகைக்குக் கிடைத்த கூப்பனால்தான் கிடைத்தது. அதனால் இந்தக் கார் எனக்குத்தான் சொந்தம். கார் சாவியைக் கொடு” என்று தகராறு செய்கிறார்.

இந்தச் சண்டையில் கார் கண்ணாடி உடைந்து காரும் டேமேஜாகிறது. கூடவே குடும்பத்தினர் அனைவருமே காயம்படுகிறார்கள். விவகாரம் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகிறது.

ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரான சுனில் ரெட்டி ஐஸ்வர்யாவை பார்த்தவுடன் அவர் மீது மோகங் கொள்கிறார். நகை வாங்கிய பில்லைக் கொண்டு வந்தால் கார் சாவியைக் கொடுப்பதாக இன்ஸ்பெக்டர் சொல்கிறார்.

இப்போது கருணாகரனும், மைம் கோபியும் ஒரு பக்கம்.. மற்றொரு பக்கம் ஐஸ்வர்யாவும், அவரது அம்மாவும்.. இதற்கிடையில் அந்தக் காரின் டிக்கியில் பிணம் இருப்பதாகச் சொல்லி கூடுதல் பயத்தை உண்டு பண்ணுகிறார்கள் லட்சுமி பிரியாவும், அவரது வருங்கால கணவரும்..!

கடைசியில் இந்தக் கார் யாருக்குச் சொந்தமாகிறது என்பதுதான் இந்த சொப்பன சுந்தரி படத்தின் திரைக்கதை.

“அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்பட்டால் அது மீள முடியாத குற்றத்தில்போய் முடியும்” என்கிற திருக்குறள்தான் இந்தப் படத்தின் மையக் கருத்து.

‘அகல்யா’வாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷூக்கு இது மிக பொருத்தமான கேரக்டர். குடும்பத்தைத் தன் தோளில் தாங்கிக் கொண்டிருக்கும் பொறுப்புணர்வோடு வாழும் ஐஸ்வர்யா.. படம் நெடுகிலும் தனது அழுத்தமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திழுக்கிறார்.

படுக்கையில் கிடக்கும் அப்பா, ஒண்ணும் தெரியாத அம்மா, திருமணத்திற்குக் காத்திருக்கும் அக்காள், பொறுப்பில்லாத அண்ணன் என்று இந்த நால்வரையும் சமாளித்து வாழும் வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார் ஐஸ்வர்யா.

தனது அண்ணனிடமும், அவரது மைத்துனர் மைம் கோபியையும் ஒரே ரேன்க்கில் மரியாதை கொடுத்து விளிப்பதும், தன்னை கண்ணாலேயே பார்த்து ரசித்து சித்ரவதை செய்யும் இன்ஸ்பெக்டரை சமாளித்து கடைசியில் அவரை இக்கட்டில் மாட்டிவிடும்போதும் ஐஸ்வர்யா காணாமல்போய் ‘அகல்யா’வே தெரிகிறார்.

அக்காவுக்கு நிச்சயமாக திருமணமாகும் என்று அவரையும் அவ்வப்போது சமாளித்து, காரை மீட்டெடுக்கபுதிய யுக்தியை ஆணுக்கு நிகராக யோசித்து செயல்படுத்தும் இந்த ஐஸ்வர்யாவின் போக்கு அவரது கேரக்டர் ஸ்கெட்ச்சிற்கு ஓகே என்றாலும் அது நேர்மையானதல்ல என்பதாலேயே கொஞ்சம் அடிபட்டுப் போகிறது.

சண்டை காட்சிகளில் ஐஸ்வர்யாவுக்காக வைக்கப்பட்டிருக்கும் ஸ்பெஷல் ஆக்சன் காட்சிகளும், அதன் படமாக்கலும் ஐஸின் ரசிகர்களை நிச்சயமாக குளிர வைத்திருக்கும்

எதையும் புரிந்து கொள்ளாமல் பேசும் அம்மாவாக தீபா ஷங்கரின் அவ்வப்போதைய அப்பாவித்தனமான வசனங்களும், பேச்சுக்களும் சிரிப்பை வரவழைக்கின்றன. ரெடின் கிங்ஸ்லியிடம் காரின் டிக்கியில் பிணம் இருப்பதாக இவர் சொல்ல.. இது கிண்டலாக சொல்லப்படும் கட்டுக் கதை என்று ரெடின் புரிந்து கொள்வதும் நல்ல காமெடிதான்.

வாய் பேச முடியாத அக்காவாக லட்சுமிபிரியாவும் சிறப்பாக நடித்துள்ளார். கல்யாணத்திற்கு ஏங்கும் தனது கனவினை தங்கையிடம் காட்டுவதும்.. மாப்பிள்ளையை பார்த்து வெட்கப்படும் அழகும், பிணம் இருப்பதாகச் சொல்லி அழும் காட்சியிலும் தனது சிறப்பான நடிப்பைக் காண்பித்திருக்கிறார்.

அண்ணனான கருணாகரன் காதல் மனைவிக்காக குடும்பத்தினரை எதிர்த்துப் பேசி பின்பு மைம் கோபி டீம் அவரைக் கழட்டிவிட்டவுடன் ஓடி வந்து ஒட்டிக் கொள்ளும் மகனாகவும் நடித்திருக்கிறார்.

மச்சானாக மைம் கோபியும், இன்ஸ்பெக்டரான சுனில் ரெட்டியும், காரை எடுக்க உதவிக்கு வரும் ரெடின் கிங்ஸ்லியும் படத்தில் எந்தவித தொய்வும் ஏற்படாமல் படத்தைகாப்பாற்றியிருக்கிறார்கள்சுனில் ரெட்டியின் காமப் பார்வையும், அதிகாரமிக்க, ஆணவமிக்க வசனங்களும், வசன உச்சரிப்பும் அவரது கேரக்டருக்கு பலம் சேர்த்திருக்கிறது.

அதிகமான வெளிப்புறக் காட்சிகளைக் கொண்டிருப்பதால் ஒளிப்பதிவு சிறப்பாகவே அமைந்துள்ளது. இரவு நேரக் காட்சிகளில் சிறப்பு. கடைசி சண்டை காட்சியை எதார்த்தமாக அமைக்க வேண்டி படக் குழுவினர் மிகப் பிரயத்தனப்பட்டிருப்பதுபோல தெரிகிறது. விஷால் சந்திரசேகரின் இசையில் மாண்டேஜ் காட்சிகளால் பாடல் காட்சிகள் ஓடி மறைகின்றன.

படத்தின் துவக்கத்தில் இருந்தே இந்தப் படத்தைக் காமெடியாக கொண்டு போக இயக்குநர் எத்தனித்துள்ளார். ஆனால் போகப் போக படத்தில் சீரியஸ்ஸும் இணைந்து கொண்டதால் பாதி கமெடியும், மீதி சீரியஸும் கலந்த படமாக உருவாகிவிட்டது.

மிகப் பெரிய லாஜிக் மீறலாக ஐஸ்வர்யா ராஜேஷ் வேலை பார்க்கும் கடைதான் இந்தக் காரை பரிசாகக் கொடுக்கிறது. இப்படியொரு திட்டம் அந்தக் கடையில் இருப்பது, ஐஸ்வர்யாவுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பேயில்லை. அவர்தான் அந்தக் கூப்பனை நிரப்பி பெட்டியில் போட்டவர்.

அப்படியிருக்க தான் வேலை பார்க்கும் நகைக் கடையின் பெயரைச் சொல்லிவிட்டு பேசுபவரிடம் ஐஸ்வர்யா ஏன் அப்படி எரிந்து விழ வேண்டும்..? அந்தக் காரை பார்த்த பின்பாவது “இது நான் வேலை பார்க்குற கடையாச்சே..!? நீங்க யார்..?” என்று எதையும் கேட்காமல் அதிர்ச்சியாவதெல்லாம் வேற லெவல் இயக்குநரே..!

இந்தப் படத்தில் எந்தக் கதாப்பாத்திரமும் நேர்மையாக இல்லை என்பதால் இவர்களைப் பார்த்து நாம் பரிதாபப்பட தேவையில்லாத சூழலை இயக்குநரே உருவாக்கிவிட்டார்.

அப்பனை மட்டையாக்கி கிட்னியை 1 லட்சத்திற்கு விற்க அம்மா நினைக்க, இளைய மகளோ 1 லட்சம் போதாது.. 3 லட்சம் வேண்டும் என்று கேட்பதும், மூத்த மகள் கிட்னியை மட்டும்தான் விக்க முடியுமா என்று கேட்பதுமாய் ஒட்டு மொத்தக் குடும்பத்தையும் கொலைகார குடும்பமாக காட்டிய பின்பு நமக்கெப்படி இவர்கள் மீது ஒரு பரிதாப உணர்வு வரும்…?

கடைசியில் மொத்தக் குடும்பமும் மனம் திருந்தி அந்தக் காரை உரியவரிடம் ஒப்படைத்தாலும் இவர்களால் கொலை செய்யப்பட்ட அப்பாவின் மரணத்திற்கு இவர்கள் எங்கே போய், யாரிடம் பாவ மன்னிப்பு கேட்கப் போகிறார்கள். கடைசியாக இந்தக் கேள்விக்கு விடையே சொல்லாமல் படத்தை முடித்திருக்கிறார் இயக்குநர்.

சொப்பன சுந்தரி – கொலைகார சுந்தரியாகிவிட்டார்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *