• Sat. Apr 27th, 2024

விரைவில் பாஜக – திமுக கூட்டணி – சீமான் ஆருடம்

ஆட்சியில் இல்லாத போது அனைத்திற்கும் எதிர்ப்பு குரல் கொடுத்த திமுக, தற்போது ஆட்சி அமைத்த உடன் அவற்றை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பிய சீமான், விரைவில் திமுக பாஜகவுடன் கூட்டணி வைக்க அதிக வாய்ப்புள்ளதாக என்று தெரிவித்தார்.

இருபது ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சீமான், ராஜூவ் காந்தி கொலை மற்றும் இஸ்லாமியர்களை விடுதலை செய்ய மறுப்பது துரோகம் என்றும், 7 தமிழர் விடுதலை மாநில அரசின் கையில் இருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில் விடுதலை செய்ய மறுப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.


இஸ்லாமியர்களின் வாக்கு வேண்டும் ஆனால் அவர்களை விடுதலை செய்ய மறுப்பதா இஸ்லாமியர்களின் பாதுகாவளர் என கூறும் திமுக இஸ்லாமியர்களை சிறையில் வைத்து பாதுகாப்பதா? என்று பேசிய அவர், திராவிடம் என்பது பிரமாணர்களும் இஸ்லாமியர்களையும் தவிர்த்து என பெரியார் சொல்லியிருக்கிறார் அங்கிருந்தே பிரச்னை தொடங்கிவிட்டது என்றும் கூறினார்.

அதிமுக ஆட்சியில் பாஜக-விற்கு அடிமைகளாக இருந்தார்கள், தற்போது திமுக பாஜக-விற்கு கொத்தடிமைகளாக இருக்கிறார்கள் என்று சாடினார்.

பிஜேபிக்குள் திமுக புகுந்துவிட்டது என்று கூறிய சீமான், ஆட்சியில் இல்லாத போது, நீட் உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக தற்போது அனைத்திற்கும் மௌனமாக இருபது ஏன் என்றார். அதேபோல் ஒவ்வொரு முறையும் ஆளுநரை பார்த்துவிட்டு வரும் போதெல்லாம் தங்கள் எதிர்ப்பை திமுக மாற்றி வருவதாகவும், தற்போது புதிய கல்வி கொள்கையில் உள்ள நல்லவைகளை எடுத்து கொள்வோம் என்று திமுக கூறுவது எந்த மாதிரியான நடவடிக்கை என்று கேள்வி எழுப்பினார். இந்நிலையில் விரைவில் திமுக பாஜக உடன் கூட்டணி வைக்க அதிக வாய்ப்பு உள்ளது என்று சீமான் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *