• Sun. Nov 10th, 2024

கோப்ரா இயக்குனரிடம் சீறிய தயாரிப்பாளர் : அப்படி என்னதான் பிரச்சனை ?

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘கோப்ரா’. இப்படத்தில் ‘கே.ஜி.எஃப்‘ ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இப்படத்தை இயக்கிவருகிறார். படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை யமைத்துள்ளார்.


இப்படத்தை மாஸ்டர் படத்தின் இணைத் தயாரிப்பாளரான லலித்குமார் தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டதை காட்டிலும் அதிக நாட்கள் நீடிப்பதால் தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.


அதாவது, இந்த படத்தின் படப்பிடிப்பு தாமதமாவதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது. ஒன்று, கோப்ரா படத்துக்கான முக்கிய காட்சிகளின் படப்பிடிப்பு ரஷ்யாவில் எடுக்க படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்புக்குச் சென்ற படக்குழு பாதியிலேயே படப்பிடிப்பை நிறுத்திவிட்டு திரும்பி வந்தது.


இரண்டாவது காரணம் இயக்குநர் அஜய் ஞானமுத்து என்கிறார்கள். உதாரணமாக, பத்து நாட்கள் படப்பிடிப்பு எடுக்க வேண்டுமென இயக்குநர் கூறுகிறாராம். ஆனால், பத்து நாளுக்குத் திட்டமிட்டு 20 நாட்களுக்குமேல் படப்பிடிப்பு எடுக்கிறாராம். அதனால், திட்டமிட்டதை விட அதிக செலவு ஆகிறதாம். அதனால், இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது.

தற்பொழுது, இந்த சிக்கலை முடிவுக்கு கொண்டுவந்து இரண்டு தரப்பும் ஓர் உடன்படிக்கைக்கு வந்திருக்கிறார்கள். இயக்குநர் எத்தனை நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டுமென்று கூறுகிறாரோ, அதற்கான பணத்தை இயக்குநர் வசமே தயாரிப்பாளர் கொடுத்துவிடுவதாகவும், அதற்கு மேலாகும் செலவை இயக்குநரே பார்த்துக் கொள்ள வேண்டுமென்பதே அந்த டீல்.


கோப்ரா படத்துக்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பி பின்னிமில் பகுதியில் நடந்துவருகிறது. தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் இடையிலான சிக்கல் சரிசெய்யப்பட்டிருப்பதால் விரைவிலேயே படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று உறுதியாகக் கூறுகிறார்கள் சினிமா வட்டாரத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *